இந்தியா

கர்நாடக முதல்வரானார் எடியூரப்பா: 29-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

27th Jul 2019 04:35 AM

ADVERTISEMENT


4-ஆவது முறையாக கர்நாடக முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா வெள்ளிக்கிழமை (ஜூலை 26) பதவியேற்றுக் கொண்டார். அவரது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
கர்நாடகத்தின் 15-ஆவது சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் 2018, மே 12-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் மே 15-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு 104, காங்கிரஸுக்கு 78, மஜதவுக்கு 37, பகுஜன் சமாஜ் கட்சி, கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி, சுயேச்சைக்கு தலா ஓர் இடங்கள் கிடைத்தன. தனித்து ஆட்சி அமைப்பதற்கு 112 இடங்கள் தேவைப்படும் நிலையில்,  104 இடங்களில் வென்றிருந்த பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. 
நழுவியது வாய்ப்பு: இதனிடையே, கர்நாடக சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சி அமைக்கும்படியும் முதல்வராகப் பதவியேற்றுக் கொள்ளும்படி ஆளுநர் வஜுபாய் வாலா விடுத்த அழைப்பின்பேரில் 2018,  மே 17-ஆம் தேதி 3-ஆவது முறையாக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற சாத்தியமில்லை என்ற நிலையில், மே 19-ஆம் தேதியே தனது பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்தார். 


கூட்டணியும், குழப்பமும்: அதன்பிறகு குமாரசாமி தலைமையில் பதவியேற்றுக் கொண்ட மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 14 மாதங்கள் ஆட்சி நடத்தியது. கடந்த ஜூலை 1 முதல் 10-ஆம் தேதி வரை 16 காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
ஆட்சிக் கவிழ்ப்பு: இதையடுத்து, சட்டப்பேரவையில்  ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு வீழ்ந்தது. முதல்வர் பதவியை குமாரசாமி ஜூலை 23-ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.
கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகும், ஆட்சி அமைக்க பாஜக அவசரம் காட்டாமல் நிதானமாக யோசித்து செயல்பட்டது. இந்நிலையில், ஜூலை 31-ஆம் தேதிக்குள் நிதி மசோதாவை நிறைவேற்றாவிட்டால் அரசு செலவினங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. 


தகுதி நீக்கம்: இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி, கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சியின் எம்எல்ஏ ஆர்.சங்கர் ஆகிய 3 பேரையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார்,  ஜூலை 25-ஆம் தேதி உத்தரவிட்டார்.  மேலும் 14 எம்எல்ஏக்களின் ராஜிநாமா மற்றும் தகுதிநீக்கம் கோரும் மனுக்கள் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் முன் விசாரணையில் உள்ளன. இந்த மனுக்கள் மீது பேரவைத் தலைவர் என்ன நடவடிக்கை எடுப்பார் எனத் தெரியாத  நிலையில், இனிமேலும் காலதாமதம் செய்யாமல் ஆட்சி அமைப்பது நல்லது என்று பாஜக தேசியத் தலைமை முடிவுக்கு வந்தது. 


பதவியேற்பு: இதைத் தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது 105 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும்பான்மை கட்சியாக விளங்குவதால், பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி, ஆளுநர் வஜுபாய் வாலாவை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் சந்தித்து எடியூரப்பா உரிமை கோரினார்.  இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தார். 
இதையடுத்து, பெங்களூரு ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் வெள்ளிக்கிழமை மாலை 6.31 மணிக்கு 4-ஆவது முறையாக கர்நாடகத்தின் முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.  அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா, பதவி பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். உழவர்களின் தோழன் என்பதைக் குறிக்கும் வகையில் தோளில் பச்சை சால்வையை அணிந்தபடி காணப்பட்ட எடியூரப்பா, கன்னட மொழியில் கடவுளின் பெயரால் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். 

ADVERTISEMENT


இந்த விழாவில், முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் ஆளுநர் ராமாஜோய்ஸ், பாஜக தேசிய பொதுச் செயலாளர்கள் பி.எல்.சந்தோஷ், முரளிதர் ராவ், பாஜக தலைவர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆர்.அசோக், சுரேஷ்குமார், அரவிந்த் லிம்பாவளி, பாஜக எம்.பி.க்கள் ஷோபா கரந்தலஜே, பிரதாப்சிம்ஹா, காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ராஜிநாமா செய்துள்ள எம்எல்ஏ ரோஷன் பெய்க், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கே.என்.ராஜண்ணா,  எடியூரப்பாவின் மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மகள்கள் உமாதேவி, அருணாதேவி மற்றும் குடும்பத்தினர் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
இந்த விழாவில் காங்கிரஸ், மஜத போன்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை.


முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜுபாய்வாலா, அரசின் தலைமைச் செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர், கர்நாடக காவல் துறை தலைவர் நீலமணி ராஜு, பாஜக முன்னணித் தலைவர்கள் உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். 
ஆலோசனை: அதையடுத்து, விதான செளதாவுக்கு சென்ற எடியூரப்பா, முதல்வர் நாற்காலியைத் தொட்டு வணங்கி அதில் அமர்ந்தார். அதிகாரிகளுடன் சற்று நேரம் ஆலோசனை நடத்திய முதல்வர் எடியூரப்பா, அதன் பிறகு, தனது தலைமையில் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இதில் தலைமைச் செயலாளர், துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


ரூ.100 கோடிக்கு நெசவாளர்கள் கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிதியுதவி: கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
நெசவாளர்களின் ரூ.100 கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்யவும், விவசாயிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிதியுதவி அளிக்கவும் முதல்வர் எடியூரப்பா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியது:  முதல்வராகப் பதவியேற்க வாய்ப்பு தந்த கர்நாடகத்தின் ஆறரை கோடி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
விவசாயிகளின் இன்னலை அறிந்திருக்கிறேன்.  விவசாயக் கூலிகள், மீனவர்கள், நெசவாளர்கள், விவசாயிகளின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்துவேன். எனது தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நெசவாளர்கள் வாங்கியுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான கடன் தொகையை தள்ளுபடி செய்ய முடிவு எடுத்துள்ளோம். பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் மாநில அரசின் சார்பில் விவசாயிகளுக்குதலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், நெசவாளர்கள் இருவரும் மாநிலத்தின் இரு கண்களைப் போன்றவர்கள்.
எனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த,  நிதி மசோதாவை நிறைவேற்ற ஜூலை 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்ட முடிவெடுத்துள்ளோம். ஜூலை 30-ஆம் தேதி கர்நாடக சட்ட மேலவை கூடி நிதி மசோதாவை நிறைவேற்றும். 
அமைச்சரவையை விரிவாக்குவது குறித்து கட்சி மேலிடத் தலைவர்களுடன் கலந்தாலோசிக்க சனிக்கிழமை புது தில்லிக்குச் செல்லவிருக்கிறேன். கட்சித் தலைமை அறிவுறுத்தலின்படி, அமைச்சரவை குறித்து முடிவெடுப்பேன் என்றார்.  
அப்போது அரசு தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT