ரேபிஸ், விஷக்கடி உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை ரூ.252 கோடி மதிப்பில் இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது.
இது தொடர்பாக, பாகிஸ்தான் நாட்டின் செய்தித்தாள் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருள்கள் தொடர்பான விவரங்களையும், பாகிஸ்தானில் மருந்துப் பொருள்கள் தயாரித்து வரும் நிறுவனங்களின் விவரங்களையும் அளிக்குமாறு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவை, தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டது.
இதையடுத்து, அது தொடர்பான அறிக்கையை நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ரஹ்மான் மாலிக்கிடம் சுகாதார அமைச்சகம் அளித்தது. அந்த அறிக்கையில், கடந்த 16 மாதங்களில், ரேபிஸ், விஷக்கடி உள்ளிட்டவற்றுக்கான தடுப்பு மருந்துகளை ரூ.252 கோடி மதிப்பில் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மருந்துகளை பாகிஸ்தானிலுள்ள தேசிய சுகாதார நிறுவனமும், தனியார் நிறுவனம் ஒன்றும் தயாரித்து வருகின்றன. ஆனால், நாட்டில் இந்த மருந்துகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. தேவையை ஈடுசெய்யும் அளவுக்கு அந்நிறுவனங்களால் மருந்துகளைத் தயாரிக்க முடியவில்லை; அதற்கான தொழில்நுட்ப வசதிகள் அந்நிறுவனங்களிடம் இல்லை.
எனவே, தேவையை ஈடுசெய்ய மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட வணிகர்கள் மூலமாகத் தேவையான மருந்துகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையை ஆராய்ந்த ரஹ்மான் மாலிக், மருந்துப் பொருள்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சகத்துக்கு வலியுறுத்தினார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.