இந்தியா

ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள்: பரிசீலனை செய்ய யுஜிசி குழு அமைப்பு

22nd Jul 2019 02:00 AM

ADVERTISEMENT

பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்தோ அல்லது ஒரே பல்கலைக்கழகத்திலிருந்தோ ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளை தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்கு குழு ஒன்றை  பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நியமித்துள்ளது. 

இதற்காக யுஜிசியின் துணைத் தலைவர் பூஷண் பட்வர்தன் தலைமையிலான அந்தக்குழு,  ஒரே பல்கலைக்கழகம் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு திட்டங்களை தொலைதூர கல்விமுறை, இணையதள (ஆன்லைன்) முறை அல்லது பகுதி நேர முறையில் பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்து இந்தக்குழு ஆய்வு மேற்கொள்ளும்.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து யுஜிசி ஆராய்வது இது முதல் முறை அல்ல. கடந்த 2012 ஆம் ஆண்டில் யுஜிசி ஒரு குழுவை அமைத்ததுடன்,  பல்வேறு ஆலோசனைகளை பெற்றது. ஆனால் இறுதியில் இந்த யோசனை ஏற்கப்படவில்லை. 

"கடந்த மாதம் அமைக்கப்பட்ட இந்த குழு ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகள் பயில்வது தொடர்பான  சாத்தியக்கூறுகள் குறித்து வெவ்வேறு தரப்பிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன' என்று யுஜிசியின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார். 

ADVERTISEMENT

கடந்த 2012ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் ஃபுர்கான் கமர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட குழு, வழக்கமாக ஒரு பட்டப்படிப்பில் சேரும் ஒரு மாணவர், ஒரே நேரத்தில் அதிகபட்சம் மேலும் ஒரு கூடுதல் பட்டப்படிப்பை பயில அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

இருப்பினும் வழக்கமான முறையை மீறி இரண்டு பட்டப்படிப்பு திட்டத்தை ஏற்பதற்கு பல்வேறு காரணங்களை கூறியும், சட்டரீதியான கவுன்சில்களிடம் இருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் அந்தக்குழுவின் அறிக்கையை  யுஜிசி நிராகரித்து விட்டது. 

இந்நிலையில், தற்போதைய தொழில்நுட்பம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதால் இப்போது இந்த யோசனையை மறுபரிசீலனை செய்ய யுஜிசி முடிவு செய்துள்ளது. வழக்கமான பட்டப்படிப்புகளைத் தவிர சிறப்பு படிப்புகளைத் தொடரவும்  பெரும்பான்மையான மக்கள் விரும்புவதால் அதற்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது என்று அந்த  யுஜிசி அதிகாரி தெரிவித்தார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT