இந்தியா

அரசு இல்லத்தை காலி செய்தார் சித்து

22nd Jul 2019 01:49 AM

ADVERTISEMENT

பஞ்சாப் அமைச்சர் பதவியிலிருந்து விலகும் முடிவை முதல்வர் அமரீந்தர் சிங் ஏற்றுக் கொண்டதையடுத்து, தாம் வசித்து வந்த அரசு இல்லத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சித்து ஞாயிற்றுக்கிழமை காலி செய்தார்.
பஞ்சாப் அமைச்சராக சித்து பதவி வகித்தபோது, மாநில அரசால் சண்டீகரில் அவருக்கு இல்லம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இல்லமே, அவரது அதிகாரப்பூர்வ அரசு இல்லமாக இருந்தது.
இதனிடையே, அமைச்சரவை இலாகாவை முதல்வர் அமரீந்தர் சிங் மாற்றியதால் ஏற்பட்ட அதிருப்தியை அடுத்து, தனது அமைச்சர் பதவியை சித்து அண்மையில் ராஜிநாமா செய்தார். இந்த ராஜிநாமாவை முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த சனிக்கிழமை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, சண்டீகரில் வசித்து வந்த அரசு இல்லத்தை சித்து ஞாயிற்றுக்கிழமை காலி செய்தார். 
முதல்வர் அமரீந்தர் சிங்குடன் கருத்து வேறுபாடு நிலவிய காலத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை சித்து தவிர்த்து வந்தார். அதேபோல், சண்டீகரில் அரசு இல்லத்தை காலி செய்தபோதும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சித்து பதிலளிக்காமல் தவிர்த்து விட்டார்.
இருப்பினும் சுட்டுரையில் அரசு இல்லத்தை காலி செய்தது தொடர்பாக சித்து தமது கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "அமைச்சர்களுக்கான பங்களாவை காலி செய்து, அதை பஞ்சாப் அரசிடம் ஒப்படைத்து விட்டேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, பாஜகவில் இருந்து விலகிய சித்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். பின்னர் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையிலும் சித்து சேர்த்து கொள்ளப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT