இந்தியா

சீனாவுடனான உறவில் இந்தியாவின் கொள்கைகள் நிலைத்தன்மையானவை: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

19th Jul 2019 01:53 AM

ADVERTISEMENT

சீனாவுடனான உறவில் இந்தியாவின் கொள்கையானது நிலைத்தன்மை கொண்டது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை கூறினார். 
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. அம்பிகா சோனி, "இந்தியா-சீனா இடையே சர்ச்சைக்குரிய விவகாரங்கள் பல உள்ளன. தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர், முன்பு சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்தபோது இந்த விவகாரங்கள் தொடர்பாக நன்கு அறிந்திருந்தார். 
அந்த சர்ச்சைக்குரிய விவகாரங்கள் பலவற்றில் தற்போதைய அரசு தீர்வு காண்பதற்கு ஜெய்சங்கரின் தனிப்பட்ட கருத்துகள் உதவியுள்ளன. தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராகியிருக்கும் ஜெய்சங்கர் சீனாவுடனான இந்திய உறவு தொடர்பாக தனது அனுகுமுறைகளை மாற்றிக்கொண்டுள்ளாரா' என்று கேள்வி எழுப்பினார். 
அதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: 
அமைச்சரோ, அல்லது தூதரோ ஓர் அரசின் அப்போதைய கொள்கை என்னவோ அதையே பின்பற்றுகிறார்கள். சீனாவுடனான இந்தியாவின் உறவைப் பொருத்த வரையில், வேறுபாடுகளைக் காட்டிலும் அதிக நிலைத்தன்மையையே காண்கிறேன். சீனாவுடன் நல்லுறவு கொண்டிருக்க இந்தியா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 
சீனா, இந்தியாவின் மிகப்பெரிய அண்டை நாடாகும். இந்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, ஆசிய பிராந்தியத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தூதராக இருந்தபோதும், வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும்போதும், இந்தியா-சீனா உறவு இரு நாடுகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறேன் என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். 
அப்போது, இரு நாடுகளிடமும் உள்ள அணு ஆயுத கையிருப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தா சேத்ரி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், "இதுதொடர்பாக ஆயுதப் பரவல் தடை தொடர்பான மாநாட்டின்போது கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் பாரபட்சமில்லாமல், அணு ஆயுத நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தால் மட்டுமே இந்தியா அந்த ஒப்பந்தத்துக்கு இணங்கும்' என்றார். 
இந்திய-சீன ராணுவங்கள் இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பதிளித்த அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பிரதமர்-சீன அதிபரும், இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT