இந்தியா

"சிப்' பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்: விரைவில் அறிமுகம் செய்ய அரசு திட்டம்

19th Jul 2019 02:00 AM

ADVERTISEMENT

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் "சிப்' பொருத்தப்பட்ட கடவுச்சீட்டுகளை (இ-பாஸ்போர்ட்) அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவையில், இது தொடர்பான கேள்வியொன்றுக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய, "சிப்' மின்னணு சாதனம் பொருத்தப்பட்ட கடவுச்சீட்டுகளை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அந்த சிப் சாதனத்தில், விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். அந்த "சிப்', தற்போதைய பாஸ்போர்ட் புத்தகத்திலேயே பதிக்கப்பட்டிருக்கும். அந்த சிப் சாதனத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை அழிக்கவோ, திருத்தவோ இயலாது.
இந்த கடவுச்சீட்டுகளை நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ் (ஐஎஸ்பி) தயாரிக்கவுள்ளது. இந்த வகை கடவுச்சீட்டுகளில் பொருத்தப்படும் சிப்களை கொள்முதல் செய்தற்கு ஐஎஸ்பி நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும்,  கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கான பிற பணிகளை மேற்கொள்வதற்கும் அந்த நிறுவனத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்பி நிறுவனம், சிப் கொள்முதலை முடித்தவுடன்,  இ-பாஸ்போர்ட் தயாரிக்கும் பணியைத் தொடங்கிவிடும்.
பாஸ்போர்ட் சேவை திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு புதிதாக கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டில் 1.08 கோடி பேருக்கும், 2018-ஆம் ஆண்டில் 1.12 கோடி பேருக்கும் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார் முரளிதரன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT