இந்தியா

குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கர்

19th Jul 2019 03:08 AM

ADVERTISEMENT

இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி, குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் தனது தீர்ப்பை புதன்கிழமை வழங்கியது. அதில், குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகள் அளிக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்றம், இந்த விவகாரத்தை மறுஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் வரை குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.  
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை கூறியதாவது:
குல்பூஷண் ஜாதவ் மிகவும் அப்பாவி ஆவார். பாகிஸ்தான் ஜோடித்துள்ள குற்றச்சாட்டுக்கும் ஜாதவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலியான குற்றச்சாட்டுகளை ஜாதவ் மீது சுமத்தி, அவருக்கான அடிப்படை உரிமைகளை மறுத்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது. இந்தியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் இல்லாமலேயே நீதிமன்றம் தன்னிச்சையாக இத்தீர்ப்பை வழங்கியது.
திருப்பி அனுப்ப வேண்டும்: எந்தத் தவறும் செய்யாத குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளை வழங்காமல், அவரது மரண தண்டனையை நிறைவேற்றினால் பாகிஸ்தான் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என இந்தியா ஏற்கெனவே எச்சரித்திருந்தது.  ஜாதவை இந்திய அதிகாரிகள் தொடர்புகொள்ளும் உரிமையையும், அவருக்குச் சட்டரீதியிலான பாதுகாப்பு அளிக்கும் உரிமையையும் பாகிஸ்தான் மறுத்தது. மேலும், ஜாதவ் கைது செய்யப்பட்டது தொடர்பான செய்தியையும் உடனடியாக அந்நாடு இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தவில்லை. இவற்றை சர்வதேச நீதிமன்றமும் தற்போது உறுதிபடுத்தியுள்ளது. 
ஜாதவுக்கு இந்தியத் தூதரகம் மூலமாக அளிக்கப்படும் உதவியை பாகிஸ்தான் அரசு அனுமதிக்க வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாதவ் மீதான வழக்கை மீண்டுமொரு முறை ஆய்வு செய்ய பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் வழிவகை செய்துள்ளது. இதைப் பயன்படுத்தி, குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் அரசு உடனடியாக விடுவித்து, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டுமென வலியுறுத்துகிறோம். 
நீதிக்குக் கிடைத்த வெற்றி: சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பானது, இந்தியாவுக்கும் ஜாதவுக்கும் கிடைத்த வெற்றி மட்டுமல்ல; நீதியின் மீது நம்பிக்கை கொண்டிருந்த அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஜாதவ் பாதுகாப்பாக இருப்பதை இந்தியா உறுதிசெய்யும். அவரது உடல்நலத்துக்கு எந்தத் தீங்கும் நேராமல் அவரைக் காக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடும். ஜாதவின் உடல்நலனைக் காப்பது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். ஜாதவை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும். 
சர்வதேச நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 16 நீதிபதிகளில், 15 நீதிபதிகள் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய ஆதரவளித்தனர். மீதமிருந்த ஒரு நீதிபதி பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதால், அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை என்றார் ஜெய்சங்கர்.
மேல்முறையீடு செய்ய முடியாது: தீர்ப்பு தொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானதாகும். அதற்குக் கட்டுப்பட்டு, பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தானால் மேல்முறையீடு செய்ய முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT