புதிய கல்விக் கொள்கை வரைவு பரிந்துரை காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்

புதிய கல்விக் கொள்கை வரைவு பரிந்துரைக்கான காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட், திமுக உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். 
புதிய கல்விக் கொள்கை வரைவு பரிந்துரை காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்

புதிய கல்விக் கொள்கை வரைவு பரிந்துரைக்கான காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட், திமுக உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். 

இதுகுறித்து மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா பேசியதாவது: 

புதிய கல்விக் கொள்கை வரைவுக்குரிய பரிந்துரைக்கான வரையறுக்கப்பட்ட காலம் குறைந்தபட்சம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட வேண்டும். வரைவின் அர்த்தமுள்ள மறுஆய்வை உறுதிப்படுத்த இது அவசியமாகிறது. ஏனெனில், 478 பக்கங்கள் கொண்ட பெரிய ஆவணமாக இது உள்ளது. இந்த வரைவுக் கொள்கையில் உள்ள பரிந்துரைகள் நமது கல்வி அமைப்பு மீதும், நாட்டின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இந்த வரைவு ஆரம்பத்தில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. அண்மையில்தான், இதன் சிறிய பதிப்பு இரட்டை மொழிகளில் வெளியிடப்பட்டது. அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் திருத்தியமைக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட வேண்டும். கல்வி பொதுப் பட்டியலில் வருவதால், மாநிலங்களின் கருத்துகளையும் பெற வேண்டும். அவர்களது கருத்து இல்லாமல் வரைவை அனுமதிக்க முடியாது என்றார்.

திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது: உறுப்பினர் டி.ராஜா கூறிய கருத்தை ஆமோதிக்கிறேன். அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கை வழங்கப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கஸ்தூரி ரங்கன் குழு சமர்ப்பித்துள்ள வரைவு அறிக்கையில் உள்ள பெரும்பாலான பரிந்துரைகள் நாட்டின் சமூக, பொருளாதார சூழ்நிலையுடன் ஒத்துப்போகவில்லை. மேலும், இதற்கான இறுதித் தேதி மத்திய மனித வள அமைச்சகத்தால் ஜூலை 30-ஆம் தேதி வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பரிந்துரை மீது கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் பலதரப்பட்ட கருத்துகளை இணையதளம் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அவை அதிகாரிகள் மூலம் மட்டுமே பரிசீலிக்கப்படும் என நினைக்கிறேன். அவை மனித வள மேம்பாடு மீதான நாடாளுமன்ற நிலைக் குழு மூலம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது என் யோசனை. அவசர கோலத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், நோக்கம் நிறைவேறாது என்றார் அவர். அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இருவரது கோரிக்கையையும் ஆதரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com