தில்லி காங்கிரஸில் மோதல் வெடித்தது!

தில்லி காங்கிரஸில் மோதல் வெடித்தது!

தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்துக்கும், அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோவுக்கும் இடையே நிலவி வந்த மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. 

தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்துக்கும், அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோவுக்கும் இடையே நிலவி வந்த மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. 
தில்லி காங்கிரஸின் மூன்று செயல் தலைவர்களே மாவட்ட, வட்டாரக் குழுக் கூட்டங்களை நடத்தி முடிவு எடுக்கலாம் என்றும் இந்த முடிவை ஷீலா தீட்சித்திடம் தெரிவித்தால் போதும் என்றும் பி.சி. சாக்கோ புதன்கிழமை  அறிவித்துள்ளார். 
சாக்கோவுக்கும், ஷீலா தீட்சித்துக்கும் நீடித்து வந்த மோதலில், ஷீலா தீட்சித்தின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு தில்லியின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன், பி.சி. சாக்கோ ஆகியோர் ஆதரவாக இருந்தனர். ஆனால், இதற்கு ஷீலா தீட்சித் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த இழுபறியால் கடைசி நேரத்தில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்தது. தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, தில்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அண்மையில் ஷீலா தீட்சித் உள்ளிட்ட தில்லி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வந்த ஷீலா தீட்சித் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தில்லியில் உள்ள 280 வட்டாரக் குழுக்கள் கலைக்கப்படுவதாக அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு தில்லி காங்கிரஸில் நிலவி வந்த உள்கட்சி பூசலை பூதாகரமாக்கியது. இந்தப் பொறுப்புகளுக்காக புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியையும் ஷீலா தீட்சித் தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி மேலிடத்துக்கு ஏராளமான கடிதங்களை அனுப்பினர். இதையடுத்து, அனைத்து வட்டாரக் குழுக்களைக் கலைத்து ஷீலா தீட்சித் மேற்கொண்ட முடிவை திரும்பப் பெறுவதாக தில்லி காங்கிரஸுக்கான மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இது தொடர்பாக ஷீலா தீட்சித்துக்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில், மூத்த தலைவராகிய நீங்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் விதிகளை மதிக்காமல் எடுத்த முடிவு வருத்தத்தை அளிக்கிறது. இதனால் கட்சியில் கருத்து வேறுபாடும், ஸ்திரத்தன்மையற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வட்டார குழுக்களின் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள் ஆகியோரிடம் இருந்து எதிர்ப்பு கடிதங்கள் வந்துள்ளன' என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
ஷீலா தீட்சித்தின் இந்த தன்னிச்சையான முடிவு வருத்தமளிப்பதாக தில்லி காங்கிரஸின் மூன்று செயல் தலைவர்களும் அவருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஷீலா தீட்சித்துக்கு சாக்கோ கடிதங்கள் எழுதியதாக கூறப்பட்டது.  ஆனால் அந்தக் கடிதங்களுக்கு ஷீலா தீட்சித்துக்கு பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, மாவட்ட, வட்டாரக் குழுக் கூட்டங்களை தில்லி காங்கிரஸின் மூன்று செயல் தலைவர்களே நடத்தி முடிவு எடுக்கலாம் என்றும் இந்த முடிவை ஷீலா தீட்சித்திடம் தெரிவித்தால் போதும் என்று பி.சி. சாக்கோ ஷீலா தீட்சித்துக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
உங்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எனது கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை என்று நினைக்கிறேன். கட்சியின் நலனைக் கருதி தில்லி காங்கிரஸின் மூன்று செயல் தலைவர்களும் மாவட்ட, வட்டாரக் குழுக்கின் கூட்டங்களை நடத்தி முடிவுகளை எடுக்கலாம். அந்தக் கூட்டத்தின் முடிவை உங்களுக்கு அனுப்பி வைக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com