குல்பூஷண் தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும்: பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

குல்பூஷண் தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும்: பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மறுஆய்வு செய்ய

இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக,  குல்பூஷண் ஜாதவை கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில், குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடுத்தது. ஈரானிலிருந்த குல்பூஷண் ஜாதவை கடத்திச் சென்று பாகிஸ்தான் கைது செய்ததாக இந்தியா குற்றஞ்சாட்டியது. 

இந்தியாவின் மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் குல்பூஷண் ஜாதவ் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் 4 நாள்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அப்போது, இருநாடுகளும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பைக் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அடிப்படை உரிமைகள் மறுப்பு:

இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அப்துல்லாவி அகமது யூசுப் தலைமையிலான 16 நீதிபதிகள் கொண்ட அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்தது. அப்போது, அவர்கள் கூறியதாவது:

பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்ட குல்பூஷண் ஜாதவை நேரில் சந்திக்கவும், அவருக்கான வாதங்களை முன்வைக்க வழக்குரைஞரை நியமிக்கவும் இந்திய அதிகாரிகள் அனுமதி கோரினர். ஆனால், பாகிஸ்தான் அரசு அந்தக் கோரிக்கைகளை மறுத்துவிட்டது. இதன்மூலம், கைது செய்யப்பட்டவருக்கு அளிக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளை மறுத்து, சர்வதேச ஒப்பந்தங்களை பாகிஸ்தான் அரசு மீறியுள்ளது.

குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீவிரமாக மறுஆய்வு செய்ய வேண்டும். அதுவரை ஜாதவுக்கான தண்டனையை பாகிஸ்தான் அரசு நிறைவேற்ற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும். அதே வேளையில், ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்து, உடனடியாக அவரை விடுதலை செய்யக் கோரிய இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஜாதவின் மரண தண்டனையை மறுஆய்வு செய்ய 15 நீதிபதிகள் ஆதரவளித்தனர். 

இருதரப்பு வாதங்கள்: முன்னதாக வழக்கு விசாரணையின்போது, இந்தியத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, ""பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் செயல்பாடு சந்தேகத்துக்கிடமான வகையில் உள்ளது. எனவே, அந்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ரத்து செய்து, குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும்'' என வாதிட்டார். 

பாகிஸ்தான் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ""குல்பூஷண் ஜாதவை இந்திய அதிகாரிகள் நேரில் சந்தித்தால், அவர் சேகரித்து வைத்திருந்த பாகிஸ்தான் தொடர்பான உளவுத் தகவல்களை அதிகாரிகள் பெற்றுவிட வாய்ப்புள்ளது. எனவேதான், அவரை நேரில் சந்திக்க நாங்கள் அனுமதி அளிக்கவில்லை. இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்'' என்று வாதிட்டார்.

சொந்த கிராமத்தில் மகிழ்ச்சி

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை, குல்பூஷன் ஜாதவின் சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்திலுள்ள ஜாவ்லி கிராம மக்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

நீதிபதி தீர்ப்பு வழங்குவதை ஜாதவின் உறவினர்களும், கிராம மக்களும் தொலைக்காட்சியில் கண்டனர். நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்ததும், வானில் பலூன்களைப் பறக்கவிட்டும், புறாக்களைப் பறக்கவிட்டும் தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

குல்பூஷண் ஜாதவின் உறவினர் ஒருவர் கூறுகையில், ""தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 

குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜாதவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். 

அது இந்திய அரசின் கடமையாகும். ஜாதவின் விடுதலையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்'' என்றார்.

நீதி வென்றுள்ளது

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், "சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். உண்மையும், நீதியும் வென்றுள்ளது. உண்மையை ஆய்வு செய்து தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றத்துக்கு பாராட்டுகள்' என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன். இது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றி. இந்தப் பிரச்னையை சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்தியாவின் சார்பில் வெற்றிகரமாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வேக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தீர்ப்பின் மூலம் குல்பூஷண் ஜாதவின் உறவினர்கள் நிம்மதி அடைவார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "மனித உரிமைகளுக்கும், சட்டவிதிகளுக்கும் தகுந்த முக்கியத்துவம் அளித்து, சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 16 நீதிபதிகளில், 15 நீதிபதிகள் தீர்ப்பை மறுஆய்வு செய்ய ஆதரவளித்துள்ளனர். இது ஏறத்தாழ ஒருமனதாக அளிக்கப்பட்ட தீர்ப்பாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கருத்து

குல்பூஷண் ஜாதவை விடுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்ததற்கு பாகிஸ்தான் அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com