திருமலையில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், அதிகாலை நேரத்தில் முக்கியஸ்தர்கள், அவர்களின் பரிந்துரைக் கடிதங்களை வாங்கி வரும் பக்தர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசன நடைமுறையை ரத்து செய்ய
திருமலையில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு


திருப்பதி ஏழுமலையான் கோயிலில், அதிகாலை நேரத்தில் முக்கியஸ்தர்கள், அவர்களின் பரிந்துரைக் கடிதங்களை வாங்கி வரும் பக்தர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசன நடைமுறையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறினார்.
இக்கோயிலில் நடைமுறையில் இருக்கும் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட எல்-1, எல்-2, எல்-3 என்ற பெயரில் 3 வகையான டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த மூன்று வகையான டிக்கெட்டுகளுக்கும் தலா டிக்கெட் ஒன்றுக்கு ரூ.500 கட்டணத்தை தேவஸ்தானம் வசூல் செய்கிறது.
விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட் பெறுவதற்காக வரும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் எல்-1 தரிசன டிக்கெட்டில் மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மட்டுமே ஏழுமலையானை வழிபட முடியும். எல்-2 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் முக்கிய பிரமுகர்களின் பரிந்துரைக் கடிதங்களைக் கொண்டு வரும் பக்தர்களுக்கும், எல்-3 பிரேக் தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்றவாறும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ஒரே கட்டணத்தில் மூன்று வகையான டிக்கெட்டுகளை வழங்கி பக்தர்களை முக்கியத்துவம் உடையவர்கள், முக்கியத்துவம் இல்லாதவர்கள் என்று பிரிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே திருப்பதி மலையில் நடைமுறையில் இருக்கும் விஐபி பிரேக்தரிசன முறையை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர் ஒருவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. 
இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, திருப்பதியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் எல்-1, எல்-2, எல்-3 ஆகிய விஐபி பிரேக் தரிசன நடைமுறையை ரத்து செய்ய தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட ரீதியான சிக்கல்கள் இல்லாத வகையில் மாற்று தரிசன முறைகளை உருவாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com