தமிழ் மொழியிலும் தபால் துறை தேர்வு: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் தபால் துறைத் தேர்வுகளை எழுதலாம் என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுகிறது
மாநிலங்களவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி.க்கள்.
மாநிலங்களவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி.க்கள்.


தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் தபால் துறைத் தேர்வுகளை எழுதலாம் என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் மாநிலங்களவையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
தமிழ் மொழியில் நடத்தப்படாத தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்யக் கோரி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தபால் துறை மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்புக்கான தேர்வை ஆங்கிலம், ஹிந்தி மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் திங்கள்கிழமை வலியுறுத்தியிருந்தனர்.
 இந்நிலையில், மாநிலங்களவை அதன் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தலைமையில் செவ்வாய்க்கிழமை கூடியதும், இந்த விவகாரத்தை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் உள்பட அக்கட்சி உறுப்பினர்களும் , திமுக உறுப்பினர்களும் எழுப்பினர். அண்மையில் ஆங்கிலம், ஹிந்தி வினாக்களில் நடத்தப்பட்ட தபால்காரர் மற்றும் இதர பணியிடங்களுக்கான தபால் துறைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் புதிதாக தேர்வு நடத்தப்படுவதுடன் அதில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித்தாள் இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளின் ஒளிபரப்பை நிறுத்துமாறு உத்தரவிட்ட எம். வெங்கய்ய நாயுடு, பின்னர் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியதும், அதிமுக உறுப்பினர்கள் மைத்ரேயன், விஜிலா சத்யானந்த், ஏ.விஜயகுமார், கே.ஆர்.அர்ஜுனன், முத்துக்கருப்பன், செல்வராஜ் உள்ளிட்டோர் அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர். தபால் துறைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என குரல் எழுப்பினர். 
தேர்வு தொடர்பாக தபால் துறை வெளியிட்ட அறிவிப்பு மற்றும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுத்தாள் ஆகியவற்றை கையில் ஏந்தியவாறு அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் முன்பாக விஜிலா சத்யானந்த் கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுத்தவாறு இருந்தார். ஒருகட்டத்தில் அந்த தாள்களை மைத்ரேயன் கிழித்து எறிந்தார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் அவரவர் இருக்கையில் இருந்தவாறு இந்த விவகாரத்தை வலியுறுத்தினர். திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் அவையின் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினார். 
அப்போது, வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன், இந்த விவகாரம் தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சருடன் மாநிலங்களவைத் தலைவர் பேசியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் புதன்கிழமை காலை அவையில் தெரிவிப்பார்' என கூறினார். 
துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அவையை சுமுகமாக நடத்தவும், கேள்வி நேரத்தைத் தொடரவும் ஒத்துழைப்புத் தாருங்கள். இந்த விவகாரம் தொடர்பாக அவைத் தலைவர் பேசியுள்ளார். அமைச்சரும் உறுதியளித்துள்ளார்' என்றார். ஆனால், இதை ஏற்க மறுத்து அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர்.
அமளி தொடர்ந்து நீடித்ததால், அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் அதிமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் கடுமையாகக் குரல் எழுப்பினர். அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடிய போது அதிமுக உறுப்பினர்கள் இதே விவகாரத்தை எழுப்பினர். இதையடுத்து, 2.30 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
அமைச்சர் உறுதி: அதன் பிறகு, அவை கூடிய போது மத்திய தொலைத் தொடர்புத் துறைத் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவையில் பதில் அளித்துப் பேசியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய  விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்தேன். இதைத்தொடர்ந்து, 14.7.2019-இல் நடத்தப்பட்ட தபால் துறைத் தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தபால்காரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தபால் துறையின் 15.5.2019-ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளுக்கும் மதிப்பு அளித்துள்ளது என்பதை ஒட்டுமொத்த தேசத்திற்கும், இந்த அவைக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். நான் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக இருந்தபோது தமிழின் ஆழத்தையும், அனைத்து இதர மொழிகளையும் கடந்து வந்துள்ளேன்  என்றார்.
தமிழக எம்.பி.க்கள் நன்றி: இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கும் அதிமுக உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், மைத்ரேயன், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர் அவையில் நன்றி தெரிவித்து பேசினர்.
14-ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து
தபால் துறையில் கிராமப்புறங்களில் பணிபுரியும் கடைநிலை  ஊழியர்கள், எழுத்தராகப் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெற்றது. 
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய 4 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. ஏற்கெனவே பணியாற்றி வரும் 989 பேர் பதவி உயர்வு, பணி நிரந்தரம் பெறுவதற்காக இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் 1,200 பங்கேற்றனர். 150 மதிப்பெண்களை கொண்ட தேர்வு 
3 மணி நேரம் நடந்தது. 
ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  தற்போது தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com