பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் கைது: தில்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் கைது: தில்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை

பயங்கரவாத அமைப்புக்கு வெளிநாடுகளில் நிதி திரட்டிய  வழக்கில்  தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை தில்லியில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)  அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனர். 

பயங்கரவாத அமைப்புக்கு வெளிநாடுகளில் நிதி திரட்டிய  வழக்கில்  தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை தில்லியில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)  அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனர். 
அவர்களை சிறப்பு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்து, பூந்தமல்லி  சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 14 பேரையும் வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்புக்காக அதன் ஆதரவாளர்கள் சிலர் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து  இதில் தொடர்புடையவர்களாக கருதப்படும் நபர்களை காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். 
இந்நிலையில், சென்னை மண்ணடி லிங்குச் செட்டித் தெருவில் செயல்படும் வஹாத்-இ-இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் நிர்வாகிகள் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாக என்.ஐ.ஏ.வுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதன்பேரில், தில்லியைச்சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுமார் 10 பேர் எஸ்.பி. ராகுல் தலைமையில் சனிக்கிழமை அதிகாலை அந்த அலுவலகத்துக்கு வந்தனர். அதேபோன்று, வேப்பேரி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அந்த அமைப்பின் தலைவரான செய்யது புகாரி வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 
சோதனைக்குப் பின்னர் செய்யது புகாரியை அவரது அலுவலகத்துக்குச் சென்று விசாரணை செய்தனர். பின்னர், அதிகாரிகள் அங்கிருந்து செய்யது புகாரி, அவரது கூட்டாளிகள் இருவரை கிண்டியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பிரதான சாலையைச் சேர்ந்த யூ.ஹசன் அலி யூனுஸ் மரைக்காயர்(30), மஞ்சக் கொல்லை பகுதியைச் சேர்ந்த மு.முகம்மது யூசுபுதீன் ஹாரிஸ் முகம்மது(34) ஆகியோர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் இருவர் வீடுகளில் இருந்தும் பென் டிரைவ்கள், மடிக்கணினி,  செல்லிடப்பேசி, புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
சோதனைக்கு பின்னர் ஹசன் அலியை நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். இதேபோல, வெளியூரில் இருந்த ஹாரிஸ் முகம்மதுவையும் அங்கு வரவழைத்து விசாரணை செய்தனர்.
 சென்னை, நாகப்பட்டினத்தில் நடைபெற்ற விசாரணையில் 3 பேரும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாக  என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, 3 பேர் மீதும் சட்ட விரோதச் செயல்பாடு தடுப்புச் சட்டம், சதி வேலைக்கு நிதி திரட்டியது, தீவிரவாத குழுவை உருவாக்க  முயற்சித்தது, இந்திய அரசுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதி திட்டம் தீட்டியது உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 
தீவிர விசாரணையில் தமிழகத்தில் 4 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட புதிதாக ஒரு இயக்கத்தை தொடங்குவதற்கு முயற்சித்திருப்பது  விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் வஹாத் -இ- இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பு கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த அமைப்பு கடந்த 2006-ஆம்  ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவு பெற்றுள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு முதலில் மதுரையில் தடம் பதித்துள்ளது. இதன் பின்னரே சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற ஊர்களில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. 
 இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் ஈடுபடும்போதே, அவர்கள் அன்சருல்லா என்ற புதிய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட திட்டமிடுவது தெரியவந்தது. 
அன்சாருல்லா அமைப்புக்கு  நிதி திரட்டிய வழக்கின் அடிப்படையில்,  தில்லியில் 14 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள் அன்சாருல்லா அமைப்புக்கு நிதி திரட்டி வருவதாக அந்த நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து, அந்த 14 பேரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.  
மதுரையை சேர்ந்த  முஹ்ம்மது ஷேக் மொஹ்தீன், திருவாரூரை சேர்ந்த  முஹம்மது அசாருதீன், சென்னையைச் சேர்ந்த  தொஹ்பீக் அஹம்மது, தேனியைச் சேர்ந்த  முஹம்மது அக்சர், மீரான் கனி,  கீழக்கரையை சேர்ந்த மொய்தீன் சீனி ஷாகுல் ஹமீது, நாகப்பட்டினத்தை சேர்ந்த  முஹம்மது இப்ராஹிம், பெரம்பலூரைச் சேர்ந்த  குலாம் நபி ஆசாத், ராமநாதபுரத்தைச் சேர்ந்த  ரஃபி அஹம்மது, முன்தாப்சீர், பைசல் ஷெரிஃப், தஞ்சாவூரை சேர்ந்த  உமர் பாஃரூக், வாலிநோக்கத்தைச் சேர்ந்த  பாஃரூக், திருநெல்வேலியை சேர்ந்த முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் ஆவார்கள். 
இவர்களை தில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் திங்கள்கிழமை முற்பகல்  அழைத்து வந்தனர். பின்னர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் செந்தூர்பாண்டியன் முன் அவர்களை ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்பு, 14 பேரையும் வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்றக்  காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com