அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீது சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன் விசாரணை நடைபெற்றது. அப்போது, ராஜீவ் சக்சேனா விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைக்கவில்லை; எனவே, அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, அமலாக்கத் துறையின் மனு மீது ஜூலை 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சக்சேனாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விவரம்: குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கு, இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ரூ.3,600 கோடி மதிப்பில் கடந்த 2010-இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்காக, இந்திய தரப்புக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில், ராஜீவ் சக்சேனாவும் ஒருவராவார். அவர், துபையைச் சேர்ந்த யுஹெச்ஒய் சக்சேனா மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆவார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட
சக்சேனா தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.