இந்தியா

ஹிமாசலில் கனமழையால் அடுக்குமாடி கட்டடம் இடிந்து இருவர் பலி: 23 பேர் காயம்

15th Jul 2019 02:19 AM

ADVERTISEMENT

ஹிமாசலப் பிரதேச மாநிலம், சோலன் மாவட்டத்தில் கனமழையால் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், ராணுவ வீரர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் காயமடைந்தனர்.
 இதுதொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
 சோலன் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள நஹான் - குமார்ஹாட்டி சாலையில் இருந்த அடுக்குமாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அந்த கட்டடத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு உணவருந்துவதற்காக, சில ராணுவ வீரர்கள், தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, காவல்துறையினர் அடங்கிய குழு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. இடிபாடுகளிலிருந்து 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்களில் ஒருவர் ராணுவ வீரர் ஆவார். காயங்களுடன் மீட்கப்பட்ட 23 பேர், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT