சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான பதிவுகளை வருமான வரி துறை கண்காணிக்கிறது என்ற கருத்து தவறானது என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பி.சி.மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது:
அதிக செலவிலான வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தொடர்பான சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகளை வருமான வரி துறை வேவு பார்ப்பதாக எழுந்துள்ள செய்திகள் மிகவும் தவறானது. இது, வருமான வரி துறை பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
வருமான வரி துறையைப் பொருத்தவரையில், அது பல்வேறு முகமை அமைப்புகளிடமிருந்து தகவல் மற்றும் தரவுகளைப் பெற அதிகாரம் பெற்ற அமைப்பு.
எனவே, அத்தகையதொரு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய அவசியம் வருமான வரி துறைக்கு இல்லை.
அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைகள் எங்கிருந்து நடைபெறுகின்றன அதற்கான மூலங்கள் என்ன என்பதை கண்டறிய வருமான வரி துறையிடம் வலுவான தரவு பகுப்பாய்வு அமைப்பு உள்ளது என்றார் அவர்.