ஏழுமலையான் கோயிலில் அளிக்கப்பட்டு வரும் விஐபி தரிசனத்தில் தற்காலிக மாற்றத்தை தேவஸ்தானம் செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூன்று விதமான விஐபி தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி முக்கியஸ்தர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எல்-1 என்ற பிரிவில் வெங்கடாசலபதியைத் தரிசனம் செய்கின்றனர். அவர்களை குடும்பமாக நிற்க வைத்து, பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காட்டி, சந்நிதியில் தீர்த்தம் அளித்து, சடாரி வைக்கப்படுகிறது. அடுத்ததாக, முக்கியஸ்தர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வரும் பக்தர்கள் எல் -2, எல்-3 ஆகிய பிரிவுகளில் ஏழுமலையானை வழிபடுகின்றனர். இந்தப் பிரிவின்படி பக்தர்கள் குலசேகரப் படி வரை சென்று தரிசிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாள்களில் பக்தர்களின் வருகை அதிகம் இருந்ததால், எல்-1 தரிசனத்திற்கு வழங்கப்படும் தீர்த்தம், சடாரி போன்ற சடங்குகள் கோயிலுக்கு வெளியே செய்யப்பட்டன. எல்-2, எல்-3 டிக்கெட் பெற்ற பக்தர்கள் ராமுலவாரிமேடை வாயில் வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த மாற்றம் தற்காலிகமாக செய்யப்பட்டது.
விரைவில் இந்த மாற்றத்தை நிரந்தரமாக அமல்படுத்த தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. புதிய அறங்காவலர் குழுக் கூட்டம் அமைக்கப்பட்டவுடன் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.