இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதியை 2024-25-ஆம் ஆண்டுக்குள் ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய ராணுவ தளவாட உற்பத்தித் துறை செயலர் அஜய் குமார் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக இதற்காக சிறப்புக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் பங்கெடுக்க அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயுதத் தயாரிப்புக்கு உதவும் 3000-க்கும் மேற்பட்ட சிறிய உதிரி பாகங்களை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதற்கு ராணுவ தளவாட உற்பத்தி வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்வது தொடக்கத்தில் கடினமான பணியாக இருக்கும். ஆனால், அதனைத் தொடங்கிய பிறகு குறிப்பிடத்தக்க அளவுக்கு ஏற்றுமதி மூலம் லாபமும் கிடைக்கும்.
கடந்த நிதியாண்டில் ரூ.10,700 கோடி அளவுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. நடப்பு நிதியாண்டில் ரூ.20,000 கோடி அளவுக்கு ஏற்றுமதிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இப்போது வரை ரூ.5,600 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. 2024-25-ஆம் ஆண்டில் ரூ.35,000 கோடி ஏற்றுமதிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2016-17-இல் ரூ.1,500 கோடி, 2017-18-இல் ரூ.4,500 கோடி என்ற அளவுக்கே ராணுவ தளவாட ஏற்றுமதி இருந்தது என்றார் அஜய் குமார்.