முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு "நீட்' என்று அழைக்கப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு தேவையில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மசோதாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: தற்போது இளநிலை மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு தேவையில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அதற்கு பதிலாக எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வில் பெறும் மதிப்பெண்களே எம்டி மற்றும் எம்எஸ் படிப்புகளுக்கான சேர்க்கைக்குப் போதுமானதாக இருக்கும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கான திருத்தம் மாற்றியமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. "நெக்ஸ்ட்' எனப்படும் "நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்' நாடு தழுவிய அளவில் ஏற்கெனவே நடத்தப்படுகிறது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கான சேர்க்கைக்கு இந்த தேர்வு முடிவுகளே போதுமானது. எனவே, எம்பிபிஎஸ் படிப்பை பூர்த்தி செய்து மருத்துவராகப் பயிற்சி பெற தேர்வு பெற்ற பிறகு, மாணவர்கள் தனியாக ஒரு தேர்வை எழுதத் தேவையில்லை என திருத்தப்பட்ட புதிய தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.