கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை திங்கள்கிழமை (ஜூலை 15) நடத்த பாஜக வலியுறுத்தி உள்ளது.
பெங்களூரு எலஹங்கா கேளிக்கை விடுதியில் தங்கியுள்ள பாஜக எம்எல்ஏக்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த அக் கட்சியின் மாநிலத்தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மஜத கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அக் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். ராஜிநாமாவை அங்கீகரிக்க பேரவைத் தலைவரை வலியுறுத்துமாறு 15 பேர் உச்சநீதிமன்றத்திற்கும் சென்றுள்ளனர். கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். மறுக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பதை நடத்த வேண்டும். எம்எல்ஏக்களின் நம்பிக்கையை இழந்துள்ள குமாரசாமி, இனியும் முதல்வர் பதவியில் தொடருவது முறையல்ல. அக் கட்சிகளைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் ஏற்கெனவே மும்பையில் தங்கியுள்ள நிலையில், பதவியை ராஜிநாமா செய்துள்ள எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் உள்ளிட்டோரும் சமாதானத்தை விரும்பாமல் மும்பைக்குச் சென்று அவர்களுடன் தங்கியுள்ளனர். கூட்டணி அரசு நிலைப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத சூழலில், முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்வதைத் தவிர, வேறு வழியில்லை என்றார் அவர்.