விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் சந்திரயான்-2 கவுன்ட்-டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.
இஸ்ரோ முதலில் நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008 அக்டோபர் 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது. நிலவின் வடதுருவத்தில் தரையிறங்கி 312 நாள்கள் ஆய்வை மேற்கொண்ட இந்த விண்கலம், நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
மேலும், மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான் போன்ற தாதுக்களும் நிலவின் பரப்பில் படிமங்களாக இருப்பதையும் சந்திரயான்-1 கண்டறிந்தது. சந்திரயான் விண்கலம் பி.எஸ்.எல்.வி.-சி11 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் நிலவில் ஆய்வை மேற்கொள்ள உள்ள சந்திரயான்-2 விண்கலம், அதிக திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட இருந்தது.
இதற்கான 20 மணி நேர கவுன்ட் - டவுன் ஞாயிற்றுக்கிழமை காலை 6.51 மணிக்குத் தொடங்கியது. விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் சந்திரயான்-2 கவுன்ட்-டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.