ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 90,025 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 43,908 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள காத்திருப்பு அறைகள் நிறைந்து பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் 24 மணிநேரத்திற்குப் பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் 13,202 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 14,623 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 19,481 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் 9,845 பக்தர்களும், கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் 4,908 பக்தர்களும் சனிக்கிழமை தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
உண்டியல் காணிக்கை ரூ.3.23 கோடி
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.3.23 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி சனிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.3.23 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.1.53 கோடி நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.26 லட்சம், ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், கல்விதான அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், பேர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி என ரூ.1.53 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.
லட்டு பைகளுக்குத் தட்டுப்பாடு
திருமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்ததால் லட்டு பைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகரித்தது. திருமலை எங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் வாடகை அறைகளைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.
சனிக்கிழமை மாலை முதல் லட்டு பைகள் போதிய அளவில் நிலுவையில் இல்லாததால் அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. லட்டு டோக்கன் வைத்துள்ள பக்தர்களுக்கு மட்டும் இலவசமாக பைகள் வழங்கப்பட்டன. புதிய லட்டு பைகள் திருப்பதியிலிருந்து கொண்டு வரப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை மாலைக்கு பிறகே தட்டுப்பாடு நீங்கியது.