திருநங்கைகள் பிச்சையெடுப்பதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் பிரிவு, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் சமூகத்திலும், பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் அதிகாரம் பெறுவதற்காகவும், அவர்களின் உரிமைகளை வரையறை செய்வதற்கும் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா-2019 தயாரிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் அவர்களுக்கு எதிரான பாகுபாட்டைக் களைவதற்கும் அதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த மசோதாவில், திருநங்கைகளை பிச்சையெடுக்க ஈடுபடுத்துவதும், அல்லது அதற்கு இணையான வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதும், கொத்தடிமையாக நடத்துவதும், தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கப்பட்டிருந்தது. இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு குறைந்தது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்த மசோதாவில் பிச்சையெடுப்பதை தண்டனைக்குரிய குற்றமாகச் சேர்ப்பதற்கு திருநங்கைகள் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நெடுங்காலமாக, தங்களுடைய வருவாய்க்கு முதன்மை ஆதாரமாக இருப்பது பிச்சை எடுப்பதுதான். வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்யாமல், பிச்சை எடுப்பதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி சட்டம் இயற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மசோதாவில் பிச்சை எடுப்பது என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. பிற வாக்கியங்கள் அப்படியே இடம்பெற்றுள்ளன.
இதேபோல், திருநங்கைகள் தங்களுக்கான அடையாளச் சான்றை, மாவட்ட பரிசீலனைக் குழுவில் இருந்து பெறலாம் என்ற பிரிவும், மசோதாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து, அடையாளச் சான்று பெற வேண்டும் என்று மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
புறக்கணிப்பு, பாகுபாடு ஆகியவற்றின் காரணமாக அவதிப்படும் திருநங்கைகள், இந்த மசோதாவால் பயன்பெறுவர் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.