உத்தரப் பிரதேசத்தில் "ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடக் கூறி இஸ்லாமிய மார்க்க அறிஞர் மீது தாக்குதல் நடத்திய 12 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக முஃசாபர்நகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சைலேஷ் குமார் பாண்டே கூறியதாவது:
சிலர் தன்னை சூழ்ந்து கொண்டு தாக்கியதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர் இம்லக்-உர்-ரஹ்மான் அளித்த புகாரின் பேரில் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் மீது இந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதற்கு அடிப்படை ஆதாரம் கிடைத்ததை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
முஃசாபர்நகரில் இருந்து தனது சொந்த கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றபோது, இளைஞர்கள் கும்பலாக தன்னை வழிமறித்து தாக்கியதாகவும், அப்போது தனது தாடியைப் பிடித்து இழுத்து "ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடும்படி மிரட்டியதாகவும் ரஹ்மான் தனது புகாரில் கூறியுள்ளார்.
அந்த வழியாக வந்த தனது கிராமத்தைச் சேர்ந்த இருவர் தன்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர். அதையடுத்து, காவல் நிலையத்துக்கு வந்து புகார் அளித்தேன் என்று காவல் துறையினரிடம் ரஹ்மான் கூறியுள்ளார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர், இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டார். அவரைத் தாக்கிய கும்பல், ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று கோஷமிடும்படி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் அந்த இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது.