இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் குறைந்து வரும் கல்வீச்சு சம்பவங்கள்: அதிகாரிகள் தகவல்  

15th Jul 2019 02:15 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்புப்படையினரை குறிவைத்து நடைபெற்று வந்த கல்வீச்சு சம்பவங்கள் அண்மைக்காலமாக பெரிதும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
 கடந்த 2016-ஆம் ஆண்டில் 2,600-க்கும் அதிகமான கல்வீச்சு சம்பவங்கள் 2019-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 40-ஆக குறைந்துள்ளன. கல் வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய 10,500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை நூறாக குறைந்துள்ளன.
 இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் கூறியிருப்பதாவது:
 2016 ஆம் ஆண்டில் 2,653 கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதற்காக 10,571 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு 276 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.
 2016-இல் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.
 2017 ஆம் ஆண்டில் 1,412 கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 2,838 வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டு, 63 பேர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற 1,458 கல்வீச்சு சம்பவங்களில் 3,797 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 65 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
 2019 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் சுமார் 40 கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அந்த புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
 மெஹபூபா முப்தி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றப் பிறகு, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்பட்டது.
 காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்குப் பின், அங்கு பாதுகாப்பு சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
 2018 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 240 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பாதுகாப்பு படையினரின் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக கல் வீச்சு சம்பவங்கள் குறைந்து போனதால், காயமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT