பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்திருப்பது ஒரு நாடகம் என்று அவருடைய சக அமைச்சர்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.
பஞ்சாப் மாநில அமைச்சரவையில் தனது இலாகாக்களை முதல்வர் அமரீந்தர் சிங் மாற்றியதால், சித்து அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில், அமைச்சர் பதவியிலிந்து ராஜிநாமா செய்வதாக சுட்டுரையில் சித்து ஞாயிற்றுக்கிழமை பதிவுகளை வெளியிட்டார். மேலும் ராகுல் காந்திக்கு கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி அனுப்பிய கடிதத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இதை விமர்சித்து, சக அமைச்சர்களான பிராம் மொஹிந்திரா, சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள், "அமைச்சர் பதவி என்பது கட்சிப் பதவி அல்ல, அதன்மீது காங்கிரஸ் தலைவரால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்பது கூட தெரியாத நபரா சித்து? இது நாடகமே தவிர, வேறு ஒன்றுமில்லை. அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என உண்மையில் சித்து விரும்பினால், அதுதொடர்பான கடிதத்தை முதல்வருக்கு நேரடியாக அவர் அனுப்பியிருக்க வேண்டும். நியமனம், பதவி விலகல் தொடர்பான முடிவுகளை வெளியிடும் தளமாக சுட்டுரையை சித்து கருதும்பட்சத்தில், தனது பதவி விலகல் முடிவு குறித்து 34 நாள்களுக்குப் பிறகு ஏன் தெரியப்படுத்தியுள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளனர்.
இன்னொரு அமைச்சரான ரஜீந்தர் சிங் பாஜ்வா கூறுகையில், "பதவி விலகல் விவகாரத்தில் மனதை மாற்றிக் கொள்ளும்படியும், அமைச்சரவையில் சேரும்படியும் சித்துவுக்கு ஆலோசனை வழங்குவேன். அதேவேளையில் பதவி விலகல் முடிவில் சித்து உறுதியாக இருந்தால், அதை முதல்வரிடம் அவர் நேரடியாக தெரியப்படுத்த வேண்டும்' என்றார்.
சிரோமணி அகாலிதளம்
கருத்து: முக்கிய எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், "பதவி விலகல் கடிதத்தை ராகுல் காந்திக்கு சித்து ஏன் அனுப்பினார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இது முழுவதும் நாடகம்' என்றார்.
பாஜக மூத்த தலைவர் தருண் சுஹு கூறுகையில், "அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய நினைத்தால், ஆளுநருக்கோ, முதல்வருக்கோதான் சித்து கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சித்துவின் ராஜிநாமா கடிதத்துக்காக காத்திருக்காமல் அவரை முதல்வர் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என்றார்.
லோக் இன்சாப் கட்சி, பஞ்சாப் ஏக்தா கட்சி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள், சித்துவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸில் இருந்து சித்து வெளியேற வேண்டும் என்று லோக் இன்சாப் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.