சட்ட ஆணையத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ளவுள்ளது.
நாட்டின் 21-ஆவது சட்ட ஆணையத்தின் மூன்றாண்டு பதவிக் காலம் கடந்தாண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் முதற்கொண்டு சட்ட ஆணையம் இல்லாமலேயே இருந்து வருகிறது. அரசுக்கு மிகவும் சிக்கலான பிரச்னைகளில் ஆலோசனைகளை வழங்க அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணியை சட்ட அமைச்சகம் தொடங்கியுள்ளது.
சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் முடிவுக்கு வந்த உடன், குழுவை மறுசீரமைக்கும் திட்டத்தை சட்ட அமைச்சகம் முன்னெடுத்தது. ஆனால், அந்த திட்டம் மேற்கொண்டு செயல் வடிவம் பெறவில்லை. அதற்குள், மக்களவை தேர்தலும் வந்ததையடுத்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், சட்ட ஆணையத்தின் மறுசீரமைப்பு பணிகளை மத்திய அமைச்சரவை அடுத்த சில நாள்களில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிபதி பி.எஸ்.சௌஹான் தலைமையிலான 21-ஆவது சட்ட குழு, ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களின் தேர்தலை நடத்துவது, பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அரசிடம் ஏற்கெனவே தனது ஆய்வறிக்கைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்கு இது சரியான நேரமல்ல என்று தெரிவித்துள்ளது.