கோவாவை ஆளும் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கோவா பார்வர்டு கட்சி (ஜிஎஃப்பி) அறிவித்துள்ளது.
பனாஜியில் அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு, இந்த முடிவை அக்கட்சி வெளியிட்டது.
இதுகுறித்து மாநில ஆளுநருக்கு அக்கட்சி சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "கோவா பார்வர்டு கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழு, சட்டப்பேரவை கட்சிக் குழு ஆகியவற்றின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கோவாவில் ஆட்சியிலிருக்கும் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 10 எம்எல்ஏக்கள் விலகி, பாஜகவில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக, கோவா அமைச்சரவையில் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த 3 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டன. அந்த 3 பேரில், கோவா துணை முதல்வராக இருந்த விஜய் சர்தேசாயும் ஒருவர் ஆவார்.
இதனால் அதிருப்தியடைந்த கோவா பார்வர்டு கட்சி, கோவா அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
கோவா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 40 இடங்களில், பாஜகவுக்கு தற்போது 27 எம்எல்ஏக்கள் உள்ளனர். கோவா பார்வர்டு கட்சிக்கு, அந்த சட்டப்பேரவையில் 3 எம்எல்ஏக்கள் உள்ளனர்.