நாட்டிலேயே முதல் முறையாக, கேரளத்தில் யானைகளுக்கான மறுவாழ்வு மையம் அமையவுள்ளது. ரூ.105 கோடி செலவில் இத்திட்டப் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
கேரளத்தில் பராமரிக்க ஆள் இல்லாத அல்லது உரிமையாளர்களால் கைவிடப்பட்ட யானைகளின் நலனுக்காக, திருவனந்தபுரத்திலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலா கிராமமான கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்க அந்த மாநில அரசு திட்டமிட்டது. இதற்கான முதல் கட்ட பணிகளை, முதல்வர் பினராயி விஜயன் கடந்த மாதம் தொடங்கிவைத்தார்.
சுமார் 56 ஹெக்டேர் பரப்பளவில் அமையும் இந்த மறுவாழ்வு மையத்தில் 50 யானைகளை பராமரிக்க முடியும் என்று முன்னாள் வனத்துறை அதிகாரியும், இத்திட்டத்துக்கு தலைமை வகித்தவருமான ஷாஜிகுமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகள் அருங்காட்சியகம், பாகன்களுக்கான பயிற்சி மையம், அதிநவீன சாதனங்களுடன் கூடிய கால்நடை மருத்துவமனை, இறந்த யானைகளின் உடல்களை எரிப்பதற்கான எரிமேடை ஆகியவை அமைக்கப்படும். இதுதவிர, நிர்வாக கட்டடங்கள், 80 பாகன்களுக்கு தங்குமிட வசதி, சுற்றுலா பயணிகளுக்கான உணவு விடுதி ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன என்றார்.
இத்திட்டத்துக்கான தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் பி.எஸ்.ஈசா கூறுகையில், "பராமரிக்க ஆள் இல்லாத அல்லது கைவிடப்பட்ட யானைகளை பராரிப்பதே மறுவாழ்வு மையத்தின் முதன்மை நோக்கமாகும். அதேசமயம், யானைகள் பற்றிய ஆய்வுகளுக்கான மிகப்பெரிய வாய்ப்பாகவும் இந்த மையம் இருக்கும். குடியிருப்பு பகுதிகளில் பிடிபடும் காட்டு யானைகளையும் இங்கு பராமரிக்க முடியும்' என்றார் அவர்.