இந்தியா

காங்கிரஸுக்கு புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும்

15th Jul 2019 02:22 AM

ADVERTISEMENT

காங்கிரஸுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரி சசிதர் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
 ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மாரி சென்னா ரெட்டியின் மகனான அவர், ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 பிற கட்சிகளைச் சேர்ந்தோரை பணபலத்தின் மூலம் தங்களது கட்சிக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை பதவி தொடர்ந்து காலியாக இருப்பதை அனுமதிக்கக் கூடாது.
 காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை நான் சந்தித்துப் பேசியபோது, அடுத்த நாங்கள் என்ன செய்வது என கேட்கின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள், அடிமட்ட பணியாளர்கள் இடையே இத்தகைய கேள்வி எழக்கூடாது. ஏனெனில் காங்கிரஸ் கட்சியின் அடித்தளமே அவர்கள்தான்.
 ஆதலால் காங்கிரஸுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டிருக்கலாமே தவிர, கட்சி அழிந்து விடவில்லை. ராகுல் காந்தியே தாம் இனி தலைவர் இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார். எனவே காங்கிரஸ் கட்சியானது, தலைமை இல்லாத கட்சியாக தொடர்ந்து இருக்கக் கூடாது. கட்சிக்கு உடனடியாக இடைக்காலத் தலைவரை மேலிடம் அறிவிக்க வேண்டும். இதனால் காங்கிரஸ் கட்சியினர் இடையே நம்பிக்கை உருவாகும்.
 தலைவர் பதவியிலிருந்து விலகும் ராகுல் காந்தியின் முடிவு கட்சியிலுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. ஆதலால்தான் புதிய தலைவரை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். இருப்பினும் கட்சித் தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்யும்பட்சத்தில், இடைக்காலத் தலைவராக கட்சியின் மூத்த பொதுச் செயலாளரை அறிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது என்றார்.
 முன்னதாக, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள், காரியக் குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று சசிதர் ரெட்டி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT