21 ஜூலை 2019

நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: குமாரசாமி

DIN | Published: 13th July 2019 04:32 AM


அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) சேர்ந்த 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா கடிதம் அளித்தனர். இதனால், மஜத -காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டிவருகிறது. மேலும், முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டுமென்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. 
இந்நிலையில்,  பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கர்நாடக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடரில் பேசிய முதல்வர் குமாரசாமி, கர்நாடக அரசியல் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு,  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர முடிவு செய்துள்ளேன்.  நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு பேரவைத் தலைவர் நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இந்த அவையின் நம்பிக்கையைப் பெற்றிருந்தால் மட்டுமே நான் முதல்வர் பதவியில் தொடர முடியும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கோரும் முடிவை எனது சுய எண்ணத்தின்படி எடுத்துள்ளேன்.  
ஒருசில எம்எல்ஏக்களின் செயல்பாடுகளால் உருவாகியுள்ள அரசியல் குழப்பங்கள், நிகழ்வுகளின் பின்னணியில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.  பதவி யாருக்கும் நிரந்தரமானதல்ல' என்றார்.
பேரவையில் பலம் என்ன? 224 எம்எல்ஏக்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பேரவைத் தலைவர் உள்பட 79 எம்எல்ஏக்கள்,  மஜதவுக்கு 37,  பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒன்று உள்பட கூட்டணி அரசுக்கு ஆதரவாக 116 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் அதிருப்தி எம்எல்ஏக்களின் 16 பேரது நிலை மதில் மேல் பூனையாக' உள்ளது.
எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 105,  சுயேச்சைகள் 2 உள்பட 107 பேரின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மை பலத்துக்கு 113 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நேரம் ஒதுக்கப்படும்: முதல்வர் முறையாக கேட்டுக்கொண்டதும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நேரம் ஒதுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார். இது குறித்து பெங்களூரு, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:  முதல்வர் விருப்பப்படி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நேரம் ஒதுக்கலாம்.  ஒருநாளைக்கு முன்பாக முதல்வர் குமாரசாமி கேட்டுக்கொண்டால்,  அவை நடவடிக்கைகளில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சேர்க்க வேண்டியது மட்டும்தான் எனது பணி என்றார் அவர்.
ராஜிநாமா செய்திருந்த எம்எல்ஏக்களில் ஆனந்த்சிங், பிரதாப் கெளடா பாட்டீல், நாராயண கெளடாவை வெள்ளிக்கிழமை விசாரிக்க பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் நேரம் ஒதுக்கியிருந்தார்.  ஆனால், இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அவர்கள் இருவரும் விசாரணைக்கு வரவில்லை. அதேபோல, ஆனந்த் சிங்கும் விசாரணைக்கு வராமல் கோவா சென்றுவிட்டார்.  இதனால் ராஜிநாமா கடிதங்கள் மீது யாரிடமும் பேரவைத்தலைவர் விசாரணை நடத்தவில்லை.
சித்தராமையா நம்பிக்கை: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா இது தொடர்பாக கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் வெற்றிபெறத் தேவையான பலம் எங்களிடம் உள்ளது.  இது எப்படி சாத்தியம் என்பதனை வாக்கெடுப்பின்போது புரிந்து கொள்வீர்கள்.  அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜிநாமா விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் முதல்வராகும் எண்ணமில்லை' என்றார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் மற்றும் மஜதவைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்துள்ள ராஜிநாமா கடிதம் தொடர்பாக வரும் 16-ஆம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது. இப்போதைய நிலையே தொடர வேண்டுமென்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முன்னதாக, தங்களது ராஜிநாமா கடிதங்களை ஏற்காமல் காலதாமதம் செய்வதால், அதன் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, எம்எல்ஏக்கள் மீண்டும் ராஜிநாமா கடிதம் அளிக்க வேண்டும் என்றும், ராஜிநாமா கடிதங்கள் மீது ஒரே நாளில் முடிவெடுக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, எம்எல்ஏக்கள் மீண்டும் ராஜிநாமா கடிதம் அளித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இந்த பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் 16-ஆம் தேதி வரை இப்போதைய நிலையே தொடர வேண்டும். எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது, ராஜிநாமா கடிதங்களை ஏற்பது அல்லது நிராகரிப்பது என எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மஜதவுடன் கூட்டணியா?
மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கும் எண்ணமில்லை என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:


மஜதவுடன் கூட்டணி அமைக்க, பாஜக திரைமறைவில் வேலை செய்து வருவதாக வதந்திகள் பரவியுள்ளன. இதில் உண்மையில்லை. மஜதவுடன் ஏற்கெனவே கூட்டணி  அமைத்து பல்வேறு இன்னல்களைச் சந்தித்துள்ளோம்.  எனவே, இனி ஒருபோதும் மஜதவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. மாநிலத்தில் விரைவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது உள்ள சூழலில் காங்கிரஸ்-
மஜத கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்றார்.

நட்சத்திர விடுதிகளில் எம்எல்ஏக்கள்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,  பாஜக, காங்கிரஸ், மஜத  எம்எல்ஏக்கள் பெங்களூரில்  உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர்.
பெங்களூரில் உள்ள குமாரகிருபா விருந்தினர் இல்லத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், அமைச்சர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் குமாரசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். 
இந்நிலையில்,  நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக தங்கள் கட்சி எம்எல்ஏக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாஜக,  காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் வெவ்வேறு நட்சத்திர விடுதிகளில் அவர்களைத் தங்க வைத்துள்ளனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: கர்நாடக சுயேட்சை எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நாளைதான் கடைசிநாள்: குமாரசாமி அரசுக்கு எடியூரப்பா செக்! 
கர்நாடகாவில் இன்று இரவு பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
தஸ்லிமா நஸ்ரினின் விசா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு 
தேர்தலில் வாக்குச் சீட்டு முறை:  மம்தா மீண்டும் வேண்டுகோள்