21 ஜூலை 2019

நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

DIN | Published: 13th July 2019 02:37 AM


நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்து நக்கீரன் இதழில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த ஒரு கட்டுரை தொடர்பாக, சென்னை ஜாம்பஜார் போலீஸார் அந்த இதழின் ஆசிரியர் கோபால் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124-இன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு, எழும்பூர் 13-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவின் கீழ் இந்த வழக்குப் பதியப்பட்டிருப்பது பொருந்தாது எனவும் உத்தரவிட்டு, நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார்.
 இதனிடைய இந்த விசாரணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 4-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, நக்கீரன் கோபாலுக்கு எதிராக எழும்பூர் 13-ஆவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜூலை 4-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஜீர், ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவின் கீழ் இந்த வழக்குப் பதியப்பட்டிருப்பது பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நக்கீரன் கோபாலுக்கு எதிராக எழும்பூர் 13-ஆவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும், மேற்படி விசாரணைக்கும் தடை விதித்ததுடன், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க நக்கீரன் கோபாலுக்கு நோட்டீஸ் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நாளை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2: தொடங்கியது 20 மணி நேர கவுன்ட்-டவுன்
நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: கர்நாடக சுயேட்சை எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நாளைதான் கடைசிநாள்: குமாரசாமி அரசுக்கு எடியூரப்பா செக்! 
கர்நாடகாவில் இன்று இரவு பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
தஸ்லிமா நஸ்ரினின் விசா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு