செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

தமிழக லோக் ஆயுக்த உறுப்பினர் நியமன வழக்கு: ஆகஸ்ட்  23-இல் இறுதி விசாரணை

DIN | Published: 13th July 2019 02:39 AM

தமிழக லோக் ஆயுக்த உறுப்பினர் நியமனத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரூரைச் சேர்ந்த ஆர். ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் டிஎன்பிஎஸ்சி-யின் முன்னாள் தலைவராக இருந்து உயர்நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட எம். ராஜாராம் மற்றும் அதிமுகவின் வழக்குரைஞர் பிரிவுச் செயலர் கே.ஆறுமுகம் ஆகியோரை லோக் ஆயுக்த அமைப்பின் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
இது லோக் ஆயுக்த சட்டத்துக்கு எதிரானது. மேலும், அரசியல் தொடர்புடைய ஒருவரும், நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட ஒருவரும் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டது விதிகளுக்கு எதிரானது. எனவே, அவர்களை உறுப்பினர்களாக நியமித்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்வதோடு, அது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், விதிப்படி உரிய தகுதியுடைய உறுப்பினர்களைத் தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை ஏப்ரல் 5-இல் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, எம். ராஜாராம், கே. ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை' எனக் கூறி இருவரின் நியமனத்திற்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 15-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கு ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது மனுதாரர் எம். ராஜாராம் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, உறுப்பினர்களின் நியமன விதிகளை குறிப்பிட்டு வாதங்களை முன் வைத்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 23-இல் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நாடு முழுவதும்  ஒரு மணிநேரம் ரயில் நிறுத்தப் போராட்டம்
மத ரீதியான கோஷங்களை எழுப்ப நிர்ப்பந்திப்பவர்கள் மீது நடவடிக்கை: மாயாவதி வலியுறுத்தல்
வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா அறிமுகம்
ம.பி. உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் தாமதம்: மத்திய அரசுக்கு எதிரான மனு மீது ஜூலை 22-இல் உச்சநீதிமன்றம் விசாரணை
மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சட்டம்: கேரள அரசு திட்டம்