கர்தார்பூர் வழித்தட விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் 14ஆம் தேதி சந்திப்பு

கர்தார்பூர் வழித்தட விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வாகா எல்லையில் சந்திக்கவுள்ளனர்
கர்தார்பூர் வழித்தட விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் 14ஆம் தேதி சந்திப்பு

கர்தார்பூர் வழித்தட விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வாகா எல்லையில் சந்திக்கவுள்ளனர் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்தது.
சீக்கியர்களின் புனிதத் தலமான குருத்வாரா, பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்துள்ளது. இது 1522ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் அதிக அளவில் பாகிஸ்தானில் இந்த குருத்வாராவுக்கு சென்று வருகின்றனர்.  இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இதற்காக வழித்தடம் அமைக்க இரு நாடுகளும் பரஸ்பரம் முடிவு செய்தன.
இதுதொடர்பாக இதற்கு முன்பு இருநாட்டு அதிகாரிகள் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
இந்நிலையில், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் முகமது பைசல், இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை கூறுகையில், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். கர்தார்பூர் வழித்தடம் அமைப்பது, அதில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து அப்போது விவாதிக்கப்படும் என்றார்.
முதல்கட்ட பேச்சுவார்த்தை அட்டாரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு தற்கொலை தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழலில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கர்தார்பூர் வழித்தடம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அமைத்துள்ள குழுவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
கர்தார்பூர் குருத்வாராவுக்கு சீக்கியர்கள் எளிதாக செல்வதற்கு வசதியாக வழித்தடம் அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டன. வழித்தடம் அமைப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடிக்கல் நாட்டியுள்ளார்.
கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடியை பாகிஸ்தான் ஒதுக்கீடு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com