இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு கர்நாடக சபாநாயகர் சவால் விட முயற்சிக்கிறாரா? உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

12th Jul 2019 12:29 PM

ADVERTISEMENT


புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு கர்நாடக பேரவைத் தலைவர் சவால் விட முயற்சிக்கிறாரா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சபாநாயகர் கருதுகிறாரா என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது உடனடியாக முடிவெடுக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞருமான அபிஷேக் மனு சிங்வி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதம் மீது ஒரே நாளில் நடவடிக்கையை அறிவிக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற வேண்டும் என்றும், அவைத் தலைவருக்கு நீதிமன்றங்கள் அறிவுறத்த முடியாது என்றம் கூறப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்கள் மனு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று கூறிவிட்டனர்.

ADVERTISEMENT

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

கர்நாடக அரசியலில்.. இதுவரை

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) - காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கடந்த ஓராண்டு காலமாகவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.  இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரிடம் கடிதம் அளித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 6-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிஹோளி, ராமலிங்க ரெட்டி, எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், சிவராம் ஹெப்பார், பிரதாப் கெளடா பாட்டீல்,  மகேஷ் குமட்டஹள்ளி, முனிரத்னா, மஜதவைச் சேர்ந்த எச்.விஸ்வநாத், கே.சி.நாராயணகெளடா, கோபாலையா ஆகிய 12 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து,  அதற்கான கடிதங்களை பேரவைத் தலைவர் அலுவலகத்தில் அளித்திருந்தனர். 

ஜூலை 9-ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க், ஜூலை 10-ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்து,  அதற்கான கடிதங்களை பேரவைத் தலைவரிடம் கொடுத்திருந்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு:  இந்த நிலையில்,  தங்களது ராஜிநாமா கடிதங்களை ஏற்காமல் கால தாமதம் செய்வதால், அதன் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரதாப் கெளடா பாட்டீல், பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், ரமேஷ் ஜார்கிஹோளி, சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர், மகேஷ் குமட்டஹள்ளி, மஜதவைச் சேர்ந்த கே.கோபாலையா, எச்.விஸ்வநாத், கே.சி.நாராயண கெளடா ஆகிய 10 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

உச்சநீதிமன்றம் உத்தரவு: இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், மாலை 6 மணிக்கு பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து ராஜிநாமா கடிதங்களைக் கொடுக்குமாறும், அவற்றின் மீது பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கையை வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. எம்எல்ஏக்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கும்படியும் உச்சநீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தது.

மும்பையில் இருந்து வந்து மீண்டும் ராஜிநாமா கடிதம்: அதன்படி, மும்பையில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும் வியாழக்கிழமை தனி விமானம் மூலம் பெங்களூருக்கு வந்து சேர்ந்தனர். விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பில் சிற்றுந்து மூலம் சட்டப் பேரவைக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர்.  அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, விதான செளதாவில் மாலை 6.15 மணிக்கு பேரவைத் தலைவர் ரமேஷ் குமாரை நேரில் சந்தித்த எம்எல்ஏக்கள் 10 பேரும் தங்கள் ராஜிநாமா கடிதங்களை மீண்டும் அளித்தனர். ராஜிநாமா கடிதங்களை உடனடியாக ஏற்க வேண்டுமென்று எம்எல்ஏக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், எம்எல்ஏக்களிடம் தனியாக மற்றொரு முறை விசாரணை நடத்திய பிறகே அதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் 10 பேரும் தனி விமானத்தில் மீண்டும் மும்பைக்குச் சென்றனர்.

சட்டப்பேரவைத் தலைவர் மனு: முன்னதாக, எம்எல்ஏக்களின் மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்த சில மணி நேரத்திலேயே சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞருமான அபிஷேக் மனு சிங்வி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதம் மீது ஒரே நாளில் நடவடிக்கையை அறிவிக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்கள் மனு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று கூறிவிட்டனர்.

பேரவைத் தலைவர் விளக்கம்
காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்பதில் கால தாமதம் செய்யவில்லை என்று பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT