இந்தியா

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: முதல்வர் குமாரசாமி அதிரடி

12th Jul 2019 01:31 PM

ADVERTISEMENT


பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தனது அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழலில், அம்மாநில சட்டப்பேரவை இன்று கூடியது.

சற்றுமுன் தொடங்கிய கர்நாடக சட்டப்பேரவையில், பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்றும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் குமாராசாமி கூறியுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் 14க்கும் மேற்பட்டோர் தங்களது ராஜினாமா கடிதங்களை அவைத் தலைவரிடம் கொடுத்திருக்கும் நிலையில், அதன் மீது வரும் செவ்வாய்க்கிழமை வரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பே, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்று குமாரசாமி கருதுவதாகத் தெரிகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்று 14 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் தோல்வி அடைந்திருந்தன. இதன் தொடர் நடவடிக்கையாக, மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கு இடையே அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், கடந்தஜூலை 1-ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13, மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் தங்கள்பதவியை ராஜிநாமா செய்து பேரவைத் தலைவரிடம் கடிதங்களை கொடுத்துள்ளனர். 

இதனிடையே, அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்த 2 சுயேச்சை எம்எல்ஏக்கள், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெற்றுக்கொண்டதோடு, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 16 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள் மீது பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் நடவடிக்கை எடுக்காததால், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது. 

கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதால் முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை முன்வைத்து பெங்களூரு விதானசெளதாவில் புதன்கிழமை பாஜக எம்எல்ஏக்கள் தர்னா போராட்டம் நடத்தினர். 

ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் பாஜக ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய மஜத,காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர். இதனால் கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவினருக்கு இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கூட்டணி அரசு கவிழும் எண்ணத்தில் இருந்த பாஜகவுக்கு பேரவைத் தலைவரின் நடவடிக்கை வருத்தத்தை அளித்துள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டப்படி பெங்களூரில் இன்று கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவைக் கூடியதும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் தொடர பாஜக ஆட்சேபனை தெரிவித்து, போராட்டத்தில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னதாக, அவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாவும், அதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் குமாரசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரகாலமாக கர்நாடகத்தில் நிகழ்ந்துவரும் அரசியல் குழப்பங்களைக் கவனித்துவரும் பொதுமக்கள், சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். தற்போதைய அரசியல் சூழலில், ஜூலை 26-ஆம் தேதிவரை 11 நாள்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருக்கும் சட்டப்பேரவைக்கூட்டம் நடக்குமா? என்பதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT