இந்தியா

விவசாயிகளை தாழ்ந்தவர்களாக கருதுகிறது மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு

12th Jul 2019 01:29 AM

ADVERTISEMENT


விவசாயிகளுக்காக மத்திய அரசு எதையும் செய்யவில்லை; தொழிலதிபர்களைவிட விவசாயிகள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்றே அரசு கருதுகிறது என்று மக்களவையில் ராகுல் காந்தி குற்றம்சாட்டிப் பேசினார். இப்போதைய 17-ஆவது மக்களவையில் அவரது முதல் உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, நாட்டில் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை ராகுல் காந்தி எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த அரசு விவசாயிகளுக்கென்று எதையும் செய்யவில்லை. பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ.4.3 லட்சம் கோடிக்கு சலுகைகளும், ரூ.5.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. அதே நேரத்தில் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசால் முடியவில்லை. தொழிலதிபர்களைவிட விவசாயிகள் தாழ்ந்தவர்கள் என்றே இந்த அரசு கருதி வருகிறது. இது ஏன் என்று தெரியவில்லை.
நாடு முழுவதுமே விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். ஓரிடத்தில் வறட்சியால் பாதிப்பு என்றால், மற்றொரு இடத்தில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. அதையும் தாண்டி விளைச்சலை கொண்டு வந்தால், விவசாயப் பொருள்களுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை. கேரளத்தில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வயநாட்டில் (ராகுலின் தொகுதி) விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
வங்கிகள் கடன் கொடுத்ததற்காக விவசாயிகளின் சொத்துகளை பறிமுதல் செய்கின்றன. கேரளத்தில் மட்டும் இதுவரை 18 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தேர்தல் பிரசாரத்தின்போது விவசாயிகளுக்கு பல வாக்குறுதிகளை பிரதமர் அளித்தார். அதனை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
அமைச்சர் பதில்:  ராகுலின் குற்றச்சாட்டுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்தார். அவர் கூறியதாவது:
நாட்டில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு எதையும் செய்யவில்லை. இதுவரை இருந்த பிரதமர்களில், மோடிதான் விவசாயிகளுக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். விவசாயிகளின் உதவித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அவர்களது வருவாய் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்புதான் நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழ்ந்தது.
விவசாயிகளின் நிலை கடந்த சில ஆண்டுகளில் திடீரென மோசமாகவிடவில்லை. நாட்டை தொடர்ந்து ஆண்டு வந்த முந்தை அரசுகள்தான் (காங்கிரஸ்) இதற்குப் பொறுப்பு. இப்போதைய அரசு விவசாயிகளின் நிலையை மேம்படுத்தி வருகிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு விவசாயப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை இப்போதைய மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT