இந்தியா

கப்பல் மூழ்கும்போது தப்பிக்கும் கேப்டன் போன்றவர் ராகுல்: சிவராஜ் சிங் சௌஹான்

12th Jul 2019 01:23 AM

ADVERTISEMENT


காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ராகுல், கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கும்போது தப்பிக்கும் கேப்டன் போன்றவர் என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜிநாமா செய்துவிட்டார். கப்பலில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு அது மூழ்கத் தொடங்கிவிட்டால் அதை பாதுகாக்கும் பணியில்தான் கேப்டன் ஈடுபடுவார். ஆனால்,  மூழ்கும் கப்பலான காங்கிரஸ் கட்சியை பாதுகாக்காமல் தப்பிவிட்டார் ராகுல்.
நாட்டுக்கு சுதந்திரம் பெறுவதே காங்கிரஸ் தொடங்கியதன் பிரதான குறிக்கோள். அது நிறைவேறிவிட்டதால், காங்கிரஸை கலைத்துவிட வேண்டும் என்று சுதந்திரம் கிடைத்த பிறகு மகாத்மா காந்தி கூறினார்.
அவருக்கு பிறகு நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவும் இதையே தெரிவித்தார். தற்போது அதை ராகுல் காந்தி நிறைவேற்றி இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றியை பெற்றுவிட்டபோதிலும் அதை கொண்டாடாமல் கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
கடினமாக பணிபுரிய வேண்டிய சூழ்நிலையில், தலைவர் பதவியை விட்டு விலகியுள்ளார் ராகுல்.
மகாராஷ்டிரத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதிக்குள்பட்ட பகுதியிலும் 200 புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார் சௌஹான்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த மாநிலத்திலும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று பதிலளித்தார் சௌஹான்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT