இந்தியா

இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் சாத்தியமில்லை: திரிணமூல் காங்கிரஸ்

12th Jul 2019 02:50 AM

ADVERTISEMENT


இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் சாத்தியமில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.
மக்களவையில் மானிய கோரிக்கைகள் மீதான  விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பியும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சுதீப் பந்தோபாத்யாய பங்கேற்று பேசியதாவது:
இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் சாத்தியமில்லாத ஒன்று. இதுதொடர்பாக அரசு பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளது. இந்திய மண்ணில் அது ஒருபோதும் சாத்தியப்படாது.
இதற்குப் பதிலாக, இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான ரயில் பாதைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை ரயில் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு சீரமைக்க வேண்டும்.
ரயில்வேயில் கேங் மேன், ஓட்டுநர்  பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. கேங்மேன் பணியிடங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இதே நிலைதான், ரயில் ஓட்டுநர் பணியிடங்களிலும் காணப்படுகிறது. ரயில் ஓட்டுநர்கள் அதிக பணி சுமையில் உள்ளனர். அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும், ரயில் ஓட்டுநர்கள் தூங்கி விடுகின்றனர். இதன்காரணமாகத்தான் ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன.
ரயில்வேயில் காலியாக இருக்கும் பணியிடங்களை எப்போது மத்திய அரசு நிரப்பும்? ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்கள் ஆகியவை குறித்த விவரங்கள் அரசு வெளியிட வேண்டும்.
சரக்கு முனையம் தொடர்பான திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ரயில்வே சமையல் அறை, உணவு பாதுகாப்பு, தரமான உணவு ஆகியவற்றுக்கும்  முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்திய ரயில்வே பணி கலாசாரத்திலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். ரயில் பயணமானது மகிழ்ச்சி நிறைந்ததாக இருப்பது அவசியம். அச்சம் கலந்ததாக ரயில் பயணம் இருக்கக் கூடாது. பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைத்ததால், ரயில்வே துறைக்கு எந்த பயனும் இல்லை என்றார் அவர்.
இந்த விவாதத்தில் ராஜன் விசாரே (எஸ்.எஸ்.), திலேஷ்வர் கமாத் (ஜேடியு), சி. சாகு (பிஜேடி), பஸ்லூர் ரஹ்மான் (பிஎஸ்பி) ஆகியோரும் பங்கேற்றனர். பஸ்லூர் ரஹ்மான் பேசுகையில்,  சிலருக்காகவே புல்லட் ரயில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது; புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியில் பாதி நிதியை சிறிய நகரங்களில் மத்திய அரசு செலவழித்தால், ரயில்வேயை மேம்படுத்த அது உதவிகரமாக இருக்கும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT