ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.
சோபியான் மாவட்டத்தில் பேட்போர்- நர்வானி பகுதியில் உள்ள இமாம் சாஹேப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும், வெடி பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும், பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அதற்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர்.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில், அதேபகுதியைச் சேர்ந்த சமீர் சே என்ற பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருள்களும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவற்றை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், பொதுமக்கள் மீதும், பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்திய வழக்கிலும் ஏற்கெனவே சமீர் சே மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.