உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஆஸம் கானின் வெற்றியை எதிர்த்து, பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெயப்பிரதா அலாகாபாத் உயர்நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் ஜெயப்பிரதா தெரிவித்திருப்பதாவது:
ராம்பூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, முகமது அலி ஜவாஹர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை ஆஸம் கான் வகித்து வந்தார். ஆதாயம் அடையும் பதவியை வகிக்கக் கூடாது என்ற விதிமுறையை அவர் பின்பற்றவில்லை.
எம்.பி. பதவியை கைப்பற்றுவதற்காக மதரீதியிலான வாக்குறுதிகளை அளித்து, குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகளை பெற்றுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்ற பதிவேட்டில் சேர்க்கப்பட்டது. மேலும், வழக்கை விசாரிக்க, அமர்வு நீதிபதிக்குழு அமைக்கவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாக்கலின்போது, ஜெயப்பிரதாவுடன், முன்னாள் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அமர் சிங் உடனிருந்தார்.
முன்னதாக, அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னெள அமர்வு குழு ஜெயபிரதாவின் மனுவை தள்ளுபடி செய்தது.