அரசு-தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
பாரத் மாலா நெடுஞ்சாலைத் திட்டம், சாகர் மாலா துறைமுகங்கள் மேம்பாட்டுத் திட்டம், பிராந்தியப் பகுதிகளுக்கு விமானச் சேவையை வழங்கும் உடான் திட்டம் உள்ளிட்டவை ஊரகப் பகுதிகளுக்கும் நகரப் பகுதிகளுக்கும் இடையே காணப்படும் இடைவெளியைக் குறைக்கப் பெரும் பங்காற்ற உள்ளன. போக்குவரத்துத் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இத்திட்டங்கள் உதவும்.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 657 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டில் இருக்கும். அதே வேளையில், ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வரும் 2030-ஆம் ஆண்டு வரை ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது. அரசு-தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் அரசு-தனியார் கூட்டு ஒத்துழைப்பின் மூலம் மேம்படுத்தப்படும். உள்நாட்டு நதிகளை போக்குவரத்துக்காகப் பயன்படுத்த அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது நெடுஞ்சாலை மற்றும் ரயில்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைப் பெருமளவில் குறைக்கும்.
ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகள் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என்றார் நிர்மலா சீதாராமன்.