இந்தியா

2018-19-இல் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.14,202 கோடி நஷ்டம்

4th Jul 2019 01:18 AM

ADVERTISEMENT


அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைபேசி நிறுவனத்துக்கு கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.14,202 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக, நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் ரூ.4,859 கோடி நஷ்டம்  ஏற்பட்டது. இதேபோல், அந்த நிறுவனத்துக்கு கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் ரூ.4,793 கோடியும், கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.7,993 கோடியும் நஷ்டம் ஏற்பட்டது. 
இந்த நஷ்டம், கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.14,202 கோடியாக அதிகரித்துவிட்டது.
செல்லிடப்பேசி அழைப்புகளுக்கு மிகக் குறைவான கட்டணம் விதிப்பதில் தொலைபேசி நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி, ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம், இணையதளச் சேவையில் 4ஜி சேவையை விரிவுபடுத்தாதது  உள்ளிட்டவை நஷ்டத்துக்கு முக்கியக் காரணங்களாகும். கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 75 சதவீதத் தொகை, அதாவது,  ரூ.14,488 கோடி, ஊழியர்களின் ஊதியத்துக்கு செலவிடப்பட்டது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
தொலைத்தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016-ஆம் ஆண்டில் கால் பதித்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் பெருமளவில் குறைந்துவிட்டது. 
கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ்  நிறுவனத்தின் வருவாய் ரூ.31,533 கோடியாகவும், கடந்த 2017-18-ஆம் ஆண்டில் ரூ.25,071 கோடியாகவும், கடந்த 2018-19-ஆம் ஆண்டில் ரூ.19,308 கோடியாகவும் உள்ளது.
அரசு இணையதளம் முடக்கம்: 
நிகழாண்டின் மே மாதம் வரை, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 இணையதளங்கள் முடக்கப்பட்டன. இந்த ஊடுருவல்களைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மற்றொரு கேள்விக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார்.
பாசுமதி அரிசி ஏற்றுமதி அதிகரிப்பு: கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியின் அளவு 44.14 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என்று மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டுச் சிறைகளில் 8,189 இந்தியர்கள்: வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் 8,189 இந்தியர்கள் உள்ளனர். 
அவர்களில் அதிகபட்சமாக சவூதி அரேபியாவில் 1,811 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,392 பேரும் உள்ளதாக, வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன், மக்களவையில் கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT