இந்தியா

விசா முறைகேடு: இந்திய வம்சாவளியினர் 4 பேர் அமெரிக்காவில் கைது

4th Jul 2019 01:13 AM

ADVERTISEMENT


ஹெச்1பி நுழைவு இசைவை (விசா) தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர் 4 பேரை அமெரிக்கக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் மனே, வெங்கட்ரமண மன்னம், ஃபெர்னான்டோ சில்வா, சதீஸ் வெமுரி ஆகியோர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 2 பணியாளர் தேர்வு நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள பிரபல நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களை வெளிநாடுகளிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பும் பணியை அந்த 2 நிறுவனங்கள் மூலமாக அவர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.
மற்ற பணியாளர் தேர்வு நிறுவனங்களின் போட்டியைச் சமாளிப்பதற்காக, தங்களது நிறுவனங்களிலேயே காலிப் பணியிடங்கள் உள்ளதாகப் போலியான ஆவணங்கள் தயார் செய்து, அதில் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நோக்கில், ஹெச்1பி நுழைவு இசைவுக்கு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நுழைவு இசைவைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு நபர்களை, தங்களது வாடிக்கையாளர்களின் நிறுவனங்களில் அவர்கள் பணியமர்த்தி வந்துள்ளனர். இவ்வாறு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, தங்களது வாடிக்கையாளர்களின் நிறுவனங்களில் காலதாமதமின்றி வெளிநாட்டுப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவதை அவர்கள் நால்வரும் மேற்கொண்டு வந்துள்ளனர்.
அவர்களின் மோசடியைக் கண்டறிந்த காவல் துறையினர் நால்வரையும் கைது செய்தனர். அவர்கள் நால்வரும் நியூ ஜெர்ஸியிலுள்ள நூவர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ரூ.1.75 கோடி பிணையுடன் நீதிபதி லேடா டூன் வெட்டேர் ஜாமீனில் விடுவித்தார். 
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு, அங்குத் தங்கி பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் ஹெச்1பி  விசாவை அமெரிக்கா வழங்கி வருகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT