இந்தியா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: எதிர்க்கட்சிகள் இரட்டை நிலைப்பாடு

4th Jul 2019 01:19 AM

ADVERTISEMENT


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துப் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை நாட்டின் பிரதமராக மக்கள் தேர்வு செய்துள்ளனர். இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது குறை தெரிவிக்கப்படுகிறது. இது சரியா? இந்த கபடம், இரட்டை நிலைப்பாடு ஆகியவைதான் நாட்டில் சிலர் கொள்கையாக வைத்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்து தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதவுள்ளது. தேர்தல் நிதி அமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அளிக்கும் ஆலோசனைகளை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஊடகம், சமூகவலைதளம், தேர்தல் பத்திரங்கள் ஆகியவற்றை மத்திய அரசு தவறாக பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை.
 மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான காலம் தற்போது வந்துள்ளது. இந்த யோசனை குறித்து எதிர்க்கட்சிகள் திறந்த மனதுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, சில முடிவு எட்டப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது அவதூறு தெரிவிக்கப்படுவதுடன், மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. கடந்த 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாடு 4 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது. 122 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளது. இவை அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமே நடந்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்தல்களில்தான், நாட்டின் பிரதமராக 2 முறை மன்மோகன் சிங்கால் வர முடிந்தது. இதேபோல், அகிலேஷ் யாதவ், மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடத்தப்பட்ட தேர்தலில்தான் மாநில முதல்வர்களாகினர். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வென்றது.
ஊடகம், சமூகவலைதளம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி, தேர்தலில் பாஜக வென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. இதுபோல குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து, நாட்டில் உள்ள வாக்காளர்களை அவமதிப்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். தேர்தல் தோல்வியையும் எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
இந்தியர்களின் தரவுகளை வெளிநாடுகள் தவறாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதிக்காது. விரைவில் இதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. பல்வேறு நலத் திட்டங்கள், ஏழைகள் நலத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தியே, மத்தியில் தொடர்ந்து 2ஆவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது என்றார் ரவிசங்கர் பிரசாத்.
விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. கபில் சிபெல் பேசுகையில், தேர்தலில் விளம்பரத்துக்கு அதிக அளவு நிதியை பாஜக செலவிட்டது. சமூக ஊடகத்தை தவறாக பயன்படுத்தியது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட புகார்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக மிகப்பெரிய தொகையை செலவிட்டுள்ளது. இந்த நிதி, எங்கிருந்து வந்தது. அது வெள்ளையா அல்லது கருப்பா?  என்றார்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பேசியபோது, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுவதை ஆதரித்தார். அவர் கூறுகையில், வளர்ந்த நாடுகளில் வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும்போது, இந்தியாவில் அத்தகைய முறையில் தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? என்றார்.
பகுஜன் சமாஜ் எம்.பி. சதீஷ் சந்திர மிஸ்ரா பேசியபோது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT