இந்தியா

மகாராஷ்டிரத்தில் அணை உடைந்தது: 9 பேர் பலி; 16 பேர் மாயம்

4th Jul 2019 01:27 AM

ADVERTISEMENT


மகாராஷ்டிர மாநிலம், கொங்கன் பிராந்தியத்தில் பலத்த மழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் புகுந்ததில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 16 பேர் மாயமாகிவிட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை 20 லட்சம் கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்டது. இடைவிடாத மழை காரணமாக மொத்த கொள்ளளவும் நிரம்பியது.
அபாய அளவை தாண்டிய அணை, செவ்வாய்க்கிழமை இரவு உடைந்தது.
இந்த அணையையொட்டி அமைந்துள்ள 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. 3 பெண்கள் உள்பட 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 16 பேர் மாயமாகிவிட்டனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரத்னகிரி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் விஷால் கெய்க்வாட் கூறுகையில், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், போலீஸாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு போலீஸார் இடமாற்றம் செய்து வருகின்றனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார்.
ஏற்கெனவே அணையில் விரிசல் ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டிவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, தவறு நேர்ந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
அத்துடன், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்துக்கு ஃபட்னவீஸ் உத்தரவிட்டுள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT