இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதி: ஹபீஸ் சயீது மீது பாகிஸ்தான் வழக்குப்பதிவு

4th Jul 2019 02:51 AM

ADVERTISEMENT


மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீது, அவரது கூட்டாளிகள் 12 பேர் ஆகியோர் மீது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்க நிதி திரட்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் நிர்ப்பந்தம் அளித்து வரும்  நிலையில், பாகிஸ்தான் இந்த வழக்கைப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீது மற்றும் அவரது கூட்டாளிகள், 5 அறக்கட்டளைகளை பயன்படுத்தி, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டி வந்தனர். இதையடுத்து ஹபீஸ் சயீது மற்றும் பிற தலைவர்கள் மீது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்க நிதி திரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜமாத் உத் தவா, லஷ்கர் ஏ தொய்பா, பலா இன்சானியத் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளின் தலைவர்களுக்கு எதிராக முல்தான், குஜ்ரன்வாலா, லாகூர் ஆகிய இடங்களில் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்க நிதி திரட்டியதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
இதுகுறித்து விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல்வழியாக ஊடுருவி பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 
இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தத் தாக்குதலை லஷ்கர் ஏ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
லஷ்கர் ஏ தொய்பா அமைப்புக்கு ஜமா உத் தவா அமைப்பே நிதியுதவி அளித்து வருகிறது. அதன் தலைவராக ஹபீஸ் சயீது உள்ளார். 
லஷ்கர் ஏ தொய்பா அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தது. ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, அவரது தலைக்கு வெகுமதியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜமா உத் தவா, லஷ்கர் ஏ தொய்பா அமைப்புகளின் தலைமை அலுவலகங்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் சீல் வைத்தனர். மேலும் 120 பயங்கரவாதிகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT