இந்தியா

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல்: நாளை பட்ஜெட்

4th Jul 2019 04:34 AM

ADVERTISEMENT


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையை தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார்.
இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்கிறார்.
பல்வேறு துறைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையானது, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2018-19 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார்.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது. அதையடுத்து, அப்பதவிக்கு கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அவர் சமர்ப்பிக்கவுள்ள முதல் பொருளாதார ஆய்வறிக்கை இதுவாகும்.
இது தொடர்பாக, கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், மத்தியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசின் முதல் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க பெரும் ஆர்வத்துடன் உள்ளேன். நான் சமர்ப்பிக்கும் முதல் ஆய்வறிக்கை இதுவாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.  
புள்ளி விவரங்கள்: மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம், நாட்டின் பொருளாதார நிலை, பல்வேறு துறைகளின் செயல்பாடு உள்ளிட்ட புள்ளி விவரங்கள் இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற உள்ளன. முக்கியமாக, அரசின் நிதிநிலைமை, நிதி மேலாண்மை, விவசாயம், ஏற்றுமதி, அடிப்படைக் கட்டமைப்பு, சேவைத் துறையின் வளர்ச்சி, சமூகக் கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாடு உள்ளிட்டவற்றில் கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், பின்னடைவுகள் குறித்த விவரங்கள் ஆய்வறிக்கையில் இடம்பெற உள்ளன.
மேலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு அடிப்படையான தேசிய வருமானம், பணவீக்கம், வர்த்தகப் பற்றாக்குறை, நாட்டின் வர்த்தக நிலை உள்ளிட்டவை தொடர்பான விவரங்களும் ஆய்வறிக்கையில் இடம்பெறும். ஆய்வறிக்கையின் ஒருபகுதியாக, கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தனது ஆலோசனைகளைத் தெரிவிக்கவுள்ளார்.
நாட்டில் குறைந்து வரும் பொருளாதார வளர்ச்சி, வேளாண் இடர்பாடு, அந்நிய முதலீட்டில் தொய்வு, வேலைவாய்ப்பின்மை, வாராக்கடன் பிரச்னை, வங்கி சாரா நிதி நிறுவனங்களில் காணப்படும் பணப்புழக்க பிரச்னை உள்ளிட்டவை குறித்தும், அவற்றைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT