இந்தியா

தொழிலதிபர் பி.கே.பிர்லா காலமானார்

4th Jul 2019 02:50 AM

ADVERTISEMENT


தொழிலதிபரும், குமார்மங்கலம் பிர்லாவின் தாத்தாவுமான பி.கே.பிர்லா மும்பையில் புதன்கிழமை காலமானார்.  அவருக்கு வயது 98.  
தொழில்துறையின் முன்னோடியாக திகழ்ந்த அவர், வயது மூப்பு காரணமாக ஏற்படும் பல்வேறு வியாதிகளால் அவதிப்பட்டு வந்தார். 
உடல்நலம் சரியில்லாமல் இருந்த பி.கே.பிர்லாவை, அவரது பேரன் குமார்மங்கலம் பிர்லா மும்பையில் சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் சென்றிருந்தார். செஞ்சுரி ஜவுளி மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவராக இருந்த  பிர்லா  தனது 15-ஆவது வயதில் தொழில்துறையில் காலடி வைத்தார். மும்பையில் காலமான அவரது உடல், கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லமான பிர்லா பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு வியாழக்கிழமை தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 
பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்த பி.கே.பிர்லா, கோசலராம் நிறுவனங்களின் தலைவராக இருந்தார். பருத்தி, விஸ்கோஸ், பாலியெஸ்டர், நைலான் துணி மற்றும் நூல் வகைகள் உற்பத்தி, பயனற்ற காகிதம், கப்பல், காகிதம், சக்கரங்கள் தயாரிப்பு (டயர் கார்டு), காகிதம், ஸ்பன் குழாய், சிமெண்ட், தேநீர், காஃபி, ஏலக்காய், ரசாயனங்கள், பிளைவுட், எம்டிஎஃப் பலகைகள் உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு ஜவுளி சார்ந்த தொழிற்சாலைகள் ஆகியவற்றின் தலைவராக அவர் இருந்தார். 
மேலும், ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பொறியியல் கல்லூரியின் தலைவராகவும், கிருஷ்ணார்ப்பன் அறக்கட்டளையின் தலைவராகவும், 25க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் புரவலராகவும் அவர் திகழ்ந்தார்.   அவருக்கு மஞ்சுஸ்ரீ, ஜெயஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரே மகனான ஆதித்யா விக்ரம் பிர்லா கடந்த 1995ஆம் ஆண்டிலும், மனைவி சரளா பிர்லா 2015ஆம் ஆண்டிலும் இறந்து விட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT