இந்தியா

தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறும் திட்டமில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்

4th Jul 2019 01:28 AM

ADVERTISEMENT


தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள், பயங்கரவாதிகள், தேசவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்பவர்கள், ஆதரவு அளிப்பவர்கள் உள்ளிட்டோர் மீது தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. பந்த பிரகாஷ் மக்களவையில் புதன்கிழமை கேள்வி எழுப்பி பேசினார். அப்போது, தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் என்பது காலனி ஆதிக்க காலகட்டத்தில் அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது நாடு சுதந்திரம் பெற்றுவிட்ட நிலையில் அதே சட்டத்தைத் தொடர வேண்டியது அவசியமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:
தேச விரோத செயல்களை இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தடுக்க வழி வகை செய்யும் தேச விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தை நீக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. தேச விரோத செயல்பாடுகளைத் தடுக்கவும், பயங்கரவாதிகளை ஒடுக்கவும் இந்தச் சட்டம் அவசியமாக தேவைப்படுகிறது என்றார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, தங்கள்கட்சி வெற்றி பெற்றால் தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. பாஜக தலைமையிலான மத்திய அரசு அச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வந்தது. அதே நேரத்தில் தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வோம் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை பாஜக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT